இந்தியா - இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடில்லி: பாதுகாப்பு, உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா, இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


தலைநகர் டில்லியில் நாட்டின் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ கலந்து கொள்கிறார். 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்த அவருக்கு, ராஷ்டிரிய பவனில் பாரம்பரிய முறைப்படி, இன்று வரவேற்பு அளிக்கப்பட்டது.


பின்னர், பிரதமர் மோடி மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ தலைமையில் இருநாட்டு அதிகாரிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் முதல் குடியரசு தின கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக இந்தோனேசியா இருந்தது. தற்போது, 75வது குடியரசு தின கொண்டாட்டத்தில் மீண்டும் இந்தோனேசியா பங்கேற்றுள்ளது. இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன்.

இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 2018ல் நான் இந்தோனேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மை அடிப்படையில் இருநாடுகளின் உறவை முன்னெடுத்துச் சென்றோம். இன்றும் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம்.
குறிப்பாக, பாதுகாப்பு துறையில் உற்பத்தி, விநியோகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, இன்டெர்நெட், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளின் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கடல்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றிலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.


கடல்சார் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிடையே, குற்றங்களை தடுத்தல், பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பு வலுப்பெறும். கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், கடந்தாண்டு மட்டும் 30 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியான்டோ கூறுகையில், 'பிரிக்ஸ் அமைப்பில் எங்களை முக்கிய உறுப்பினராக்க, ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உற்பத்தி, முதலீடு, சுற்றுலா, சுகாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு, கூட்டாண்மை, டிஜிட்டல், ஏ.ஐ., ஐ.டி., உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். எங்களின் தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவுக்கு அனுப்பி, அவர்கள் கற்றுக் கொண்டதை எங்கள் நாட்டில் செயல்படுத்தி வருகிறோம். அது எங்களுக்கு முன்மாதிரியானதாக திகழ்கிறது. இதற்காக உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி," எனக் கூறினார்.

Advertisement