விபத்தில் புதுப்பெண் பலிமணமான 3 மாதத்தில் சோகம்



விபத்தில் புதுப்பெண் பலிமணமான 3 மாதத்தில் சோகம்


பெத்தநாயக்கன்பாளையம்:ஆத்துார், கல்பகனுாரை சேர்ந்தவர் அறிவுமணி, 31. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார்.
இவர், வாழப்பாடி, முத்தம்பட்டியை சேர்ந்த கார்த்திகா, 28, என்பவரை, 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துவிட்டு, மீண்டும் கல்பகனுார் நோக்கி, தம்பதியர், ஸ்பிளண்டர் பைக்கில் புறப்பட்டனர். ஹெல்மெட் அணியாமல், அறிவுமணி ஓட்டினார்.
புத்திரகவுண்டன்பாளையத்தில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே நடந்துசென்ற ஒருவர் மீது, எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் அந்த வாலிபர், லேசான காயத்துடன் தப்பினார்.
ஆனால் பைக்கில் இருந்து விழுந்த தம்பதியர் படுகாயம் அடைந்தனர். மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரவு, 11:30 மணிக்கு கார்த்திகா உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement