அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் போலீசார் மிரட்டுவதாக குற்றச்சாட்டு
பெங்களூரு : குறைந்தபட்ச ஊதியம் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போராட்டம் நான்காவது நாட்களை எட்டியது.
தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரின் சுதந்திர பூங்காவில் இவர்கள் நடத்தும் போராட்டம், நேற்று நான்காவது நாளை எட்டியது.
கடுமையான குளிரிலும், அடிப்படை வசதிகள் இல்லாமல், இரவு, பகலாக அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
கழிப்பறைக்கு 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் வசதியும் இல்லை என, அங்கன்வாடி ஊழியர்கள் வருந்துகின்றனர்.
போலீசாரின் மூலம் அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை; போராட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்வோம். இடத்தை காலி செய்யும்படி, அங்கன்வாடி ஊழியர்களை போலீசார் மிரட்டுகின்றனர். இங்கு ஷாமியானா போட்டவர்களையும் போலீசார் மிரட்டுவதாக கூறப்படுகிறது.
போலீசாரின் மிரட்டலுக்கு, அங்கன்வாடி ஊழியர்கள் பணியவில்லை. பெண்களை கோபப்படுத்தினால், சூழ்நிலை நன்றாக இருக்காது என, அரசை எச்சரித்துள்ளனர். இன்று போராட்டத்துக்கு அதிக எண்ணிக்கையில், அங்கன்வாடி ஊழியர்கள் வருவர் என தெரிகிறது.