அமைச்சர்கள், தலைவர்கள் ரகசிய ஆலோசனை; காங்கிரஸ், பா.ஜ., மேலிடத்துக்கு தலைவலி

பெங்களூரு : கர்நாடக பா.ஜ.,வில் மட்டுமல்ல, ஆளுங்கட்சியான காங்கிரசில், சமீப நாட்களாக கோஷ்டிப்பூசல் அதிகரித்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகள் மீது கண் வைத்துள்ள அமைச்சர்கள், அவ்வப்போது 'டின்னர்' ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

இதற்கு முன்பு பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் இல்லத்தில், 'டின்னர் மீட்டிங்' நடந்தது. இது சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சிகளின் விமர் சனத்துக்கு வழி வகுத்தது.அதன்பின் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் இல்லத்தில் இதுபோன்ற 'டின்னர் மீட்டிங்' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த கட்சி மேலிடம், கடுமையாக கண்டித்தது. கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என எச்சரித்தது. மேலிடத்தின் உத்தரவுப்படி மீட்டிங் ரத்துசெய்யப்பட்டது.

அமைச்சர்களின் செயலால் எரிச்சலடைந்த, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அமைச்சர்களை எச்சரித்தார். முதல்வர், 'மாநில முதல்வர், தலைவர் மாற்றம் குறித்து பேசக் கூடாது. இது பற்றி முடிவு செய்ய மேலிடம் உள்ளது. டின்னர் மீட்டிங் நடத்துவது சரியல்ல' என, அறிவுறுத்தினார்.

ஆனால் தேசிய தலைவரின் உத்தரவை பொருட்படுத்தாமல், நான்கு அமைச்சர்கள் நேற்று ரகசிய ஆலோசனை நடத்தியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

விதான் சவுதாவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில் சதீஷ் ஜார்கிஹோளி, ராஜண்ணா, மஹாதேவப்பா ஆகியோர்பங்கேற்றுள்ளனர்.

பா.ஜ.,



அதேபோன்று, பா.ஜ., விலும் தலைவர்களின்ரகசிய ஆலோசனைக்கு பஞ்சம் இல்லை. முன்னாள்அமைச்சர் குமார் பங்காரப்பாவின், பெங்களூரின்சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

அதிருப்தி கோஷ்டிக்கு தலைமை தாங்கும் பசனகவுடா பாட்டீல் எத்னால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ரமேஷ் ஜார்கிஹோளி, முன்னாள் எம்.பி.க்கள் சந்திரப்பா, சித்தேஸ்வர், நாயக் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

Advertisement