தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை
சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பியுள்ளது.
சென்னை - செங்கல்பட்டு ரயில் பாதை, தென் மாவட்டங்களுக்கு செல்ல பிரதான பாதையாக இருக்கிறது. இவற்றில், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பயணியர் சென்று வருகின்றனர். பயணியர் தேவைக்கு, புறநகர் மின்சார ரயில் இயக்கம் இல்லை. கூடுதல் ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, மூன்று பாதைகள் உள்ளன. போதிய ரயில் பாதை இல்லாததால், ரயில் சேவை அதிகரிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.
எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புது பாதையை, ரயில்வேயுடன் இணைந்து அமைக்க தமிழக அரசு விருப்பம் தெரிவித்தது. அதன்படி, இந்த திட்டத்திற்கான, விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநில அரசுகள், ரயில்வேயுடன் இணைந்து, திட்டப்பணிகளை நிறைவேற்றுகின்றன.
அந்த வகையில், தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், புறநகர் பயணியருக்கான சேவையை வழங்க, இந்த திட்டப்பணி மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, 1,165 கோடி ரூபாயில் இந்த திட்டம் செயல்படுத்த, டி.பி.ஆர்., எனும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். இதற்கான அறிவிப்பை, ரயில்வே வாரியம் வெளியிடும்.
அதன்பின், போதிய நிலங்களை கையகப்படுத்தி, ரயில் பாதை பணிகளை மேற்கொள்வோம். இந்த புதிய பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதல் ரயில்கள் தேவை
இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இவர்கள், புறநகர் மின்சார ரயில் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
தேவை அதிகரித்ததால் தான், தாம்பரம் -- செங்கல்பட்டு இடையே மூன்றாவது பாதை அமைக்கப்பட்டது. பயன்பாட்டிற்கு வந்த பிறகும், கூடுதல் மின்சார ரயில்களை ரயில்வே இயக்கவில்லை. 15 சதவீதம் ரயில் சேவையை அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படவில்லை.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பொத்தேரி, ஊரப்பாக்கம், வண்டலுார் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.
சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை, செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.