கூட்டு பலாத்காரம்: மூவருக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம்: மனநலம் பாதித்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மூவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூரை சேர்ந்த 33 வயது மனநலம் பாதித்த பெண், கடந்த 25.8.2017ம் தேதி செஞ்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
காந்தி பஜாரில் தனியாக நடந்து சென்ற அப்பெண்ணை, செஞ்சி அடுத்த கோணை மாதா கோவில் தெரு ராஜி மகன் ரஞ்சித்குமார்,27; செஞ்சி சக்கராபுரம் காலனி முனியப்பன் மகன் துரை,30; சிறுகடம்பூர் கண்ணன் மகன் குபேரன்,32; ஆகியோர் துாக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
புகாரின் பேரில் ரஞ்சித்குமார் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த செஞ்சி போலீசார், அவர்கள் மீது விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ரஞ்சித்குமார், துரை, குபேரன் ஆகிய மூவருக்கும் தலா 20 ஆண்டு சிறை மற்றும் ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.