போலீஸ் என காதலர்களை மிரட்டி பணம் பறித்த விருத்தாசலம் நபர் கைது

1

புதுச்சேரி: புதுச்சேரி, காலாப்பட்டில் பைக் திருட்டு அதிகரித்து வந்தது. அதனையொட்டி, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார், மர்ம நபரை தேடிவந்தனர்.

அதன்பேரில், பிம்ஸ் மருத்துவமனை அருகே, பைக் திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பாங்குளத்தை சேர்ந்த சிவராமன்,43; என்பதும், இவர் போலீஸ் எனக் கூறிக் கொண்டு பார்க், கடற்கரை பகுதியில், தனியாக இருக்கும் காதலர்களை மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. அவ்வாறு கடந்த 2021ம் ஆண்டு, கிருமாம்பாக்கம் கடற்கரையில், காதலர்களிடம் இருந்து 5 சவரன் நகை பறித்துள்ளார்.

தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடியது தெரிய வந்தது. பைக் திருடும் போது, காரில் வந்து, அங்கு காரை நிறுத்தி விட்டு, பைக்கை திருடி சென்று, பின் காரை எடுத்து செல்வதும், தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சிவராமனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர் திருட பயன்படுத்திய கார், ஒரு பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.

Advertisement