போலீஸ் கமிஷனர் பெயரில் போலி அறிவிப்பு; நடவடிக்கை எடுக்க ஜே.டி.யூ., வலியுறுத்தல்

பெங்களூரு : சில்லரை கொண்டு வருவது, பஸ் பயணியரின் கடமை என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் அறிவிப்பு, பி.எம்.டி.சி., பஸ்சில் ஒட்டப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் நான்கு போக்குவரத்துக் கழகங்களின் பயண கட்டணம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதன் பின், பி.எம்.டி.சி., பஸ்களில் சில்லரை பிரச்னை தலைதுாக்கியுள்ளது. இதனால் நடத்துனர், பயணியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் 'பி.எம்.டி.சி., பஸ்களில் பயணிப்போர், சில்லரை கொண்டு வர வேண்டும். இது அவர்களின் கடமை' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த அறிவிப்பு, பி.எம்.டி.சி., பஸ்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

விசாரித்தபோது, இந்த உத்தரவு மோசடியானது என்பது தெரிய வந்தது. வதந்தி பரப்பியோர் மீது, நடவடிக்கை எடுக்குமாறு ஜே.டி.யூ., எனும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் ஸ்ரீபதி ராவ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷனருக்கு அளித்த புகாரில் அவர் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் நான், பி.எம்.டி.சி., பஸ்சில் பயணம் செய்தேன். பஸ்சின் உட்புற கண்ணாடியில், நகர போலீஸ் கமிஷனர் பெயரில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்.

சில்லரை கொண்டு வருவது, பயணியரின் கடமை என, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. தவறான தகவல். பயணியர் சில்லரை பெறும் உரிமையை பறித்து, நடத்துனர்கள் மனம் போனபடி, பணம் வசூலிக்க வாய்ப்பு அளிக்கலாம்.

இத்தகைய அறிவிப்பை நீங்கள் (கமிஷனர்) வெளியிடவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் உச்ச நீதிமன்றம், பஸ் நடத்துனர்களை மக்களின் சேவகர்களாக அடையாளம் கண்டுள்ளது.

பணியாற்றும்போது நடத்துனர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, பணியில் குறுக்கீடு செய்தாலோ வெவ்வேறு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது என, கூறப்பட்டுள்ளது.

பயணியருக்கு டிக்கெட் வழங்கவும், சில்லரை கொடுப்பதும் நடத்துனரின் கடமை. பயணியர் சரியான சில்லரை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயமோ, சட்டமோ இல்லை.

சில்லரை பிரச்னைக்கு தீர்வு காண்பதில், பி.எம்.டி.சி., நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. ரிசர்வ் வங்கி, கோவில்களில் தேவையான சில்லரையை பெற்றுக் கொள்ளும் வழி உள்ளது. அதை விட்டுவிட்டு பயணியருக்கு தொந்தரவு கொடுப்பது சரியல்ல.

இவ்வாறு புகாரில் கூறி உள்ளார்.

Advertisement