அதிக வட்டி ஆசை காண்பித்து ரூ.30 கோடியுடன் ஓட்டம்

துமகூரு : அதிக வட்டி ஆசை காண்பித்து, பணம் வசூலித்த நகைக்கடை உரிமையாளர், 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.


துமகூரின் குவெம்பு நகரில் குடும்பத்துடன் வசித்தவர் சிவானந்த மூர்த்தி. இவரது மகன் ஆகாஷ், நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார்.


துமகூரு பஸ் நிலையம் எதிரில் உள்ள ஜி.எம்.எஸ்., காம்பிளக்சில் சிவானந்த மூர்த்தி 'ஆகாஷ் ஜுவல்லரி' என்ற பெயரில், நகைக்கடை நடத்தினார். நகைக்கடையுடன் சீட்டு தொழிலும் நடத்தியுள்ளார். சமீபத்தில் கூட்டுறவு சொசைட்டி துவங்கினர்.


நகைக்கடை, கூட்டுறவு சொசைட்டியில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக சிவானந்த மூர்த்தி அறிவித்தார். இதை நம்பிய பலர் முதலீடு செய்தனர். ஆனால் வட்டியும் தரவில்லை. பணத்தை சுருட்டிக் கொண்டு, சிவானந்த மூர்த்தியின் குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். 30 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.


பணத்தை இழந்தவர்கள், துமகூரு நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சிவானந்த மூர்த்தி, இவரது மனைவி பூர்ணிமா, மகன் ஆகாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement