கோவில்களில் வி.ஐ.பி., தரிசனம் தவறுதான்... ஆனால் தடுக்க கோர்ட் மறுப்பு
புதுடில்லி : கோவில்களில் வி.ஐ.பி., சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராதா மதன் மோகன் கோவிலில் பணியாற்றும் விஜய் கிஷோர் கோஸ்வாமி என்பவர், உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த பொதுநல மனு:
நாட்டில் உள்ள பிரதான கோவில்களில் விரைவாக தரிசனம் செய்ய, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் வசதி படைத்தோர் பயனடைகிற நிலையில், ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படுகின்றனர். கடவுளை தரிசனம் செய்வதில் பாகுபாடு நிலவுகிறது. இதை ரத்து செய்து, அனைவருக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை
வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:
கோவில்களில் சிறப்பு தரிசனம் அளிக்கப்படக் கூடாது என, நாங்கள் கருதினாலும், இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.