மசாஜ் செய்த சிறை காவலர்கள்; 'எஸ்கேப்' ஆன கைதியால் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசத்தில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறை கைதியை, மீண்டும் சிறைக்கு அழைத்து வராமல், 'மசாஜ்' சென்டருக்கு சென்று சிறை காவலர்கள் மசாஜ் செய்த நிலையில், அங்கிருந்து கைதி தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகம்
ம.பி.,யின் உஜ்ஜயின் மாவட்டத்தின் நாக்டா நகரில் உள்ள சிவபாபா மதுபான நிறுவனத்தில், கடந்த டிச., 25ம் தேதி, ஆயுதமேந்திய ஐந்து பேர், 18 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்தனர்.
இந்த சம்பவத்தில், ரோகித் சர்மா என்ற முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீசார், கச்ரோட் சிறையில் கடந்த 5ம் தேதி அடைத்தனர்.
காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக ரோகித் சர்மா கூறியதை அடுத்து, கடந்த 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, சிறை காவலர்கள் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நிதின் தலோடியா ஆகியோர், கச்ரோட் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
மாலை 6:00 மணி ஆகியும், ரோகித் சர்மா சிறைக்கு வரவில்லை. இதுகுறித்து, ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நிதின் தலோடியா ஆகியோரிடம் சிறை அதிகாரிகள் விசாரித்தனர்.
இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த அதிகாரிகள், கச்ரோட் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
விசாரணை
அதில், மதியம் 12:30 மணி அளவில், மருத்துவமனையில் இருந்து கைதி ரோகித் சர்மா வெளியே செல்வது பதிவானது.
நிலைமை தீவிரமடைய, சிறை காவலர்கள் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நிதின் தலோடியா ஆகியோரிடம் விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அப்போது தான், பகீர் தகவலை அவர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சை முடிந்து ரோகித் சர்மாவை மீண்டும் சிறைக்கு அழைத்து வராமல், 30 கி.மீ., தொலைவில், ரத்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நிதின் தலோடியா ஆகியோர் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இருவரும் மசாஜ் செய்துள்ளனர். மேலும், கைதி ரோகித் சர்மாவும் மசாஜ் செய்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அவர், அங்கிருந்து தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த விவகாரத்தில், சிறை காவலர்கள் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா, நிதின் தலோடியா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமறைவான ரோகித் சர்மாவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.