டங்ஸ்டன் திட்டத்தால் மனதில் தடம் பதித்த பா.ஜ.,



மதுரை: மதுரை டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்ட நடவடிக்கையை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதில் தி.மு.க.,- பா.ஜ.,- அ.தி.மு.க.,வுக்கு இடையே வெளிப்படையான போட்டி நிலவியது.



ஆனால் வித்தியாசமான 'ரூட்டில்' சென்று டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்ட மத்திய அரசின் உத்தரவை கல்வெட்டாகவே வழங்கி, அப்பகுதி மக்கள் மனதில் பிரதமர் மோடியின் பிம்பத்தை பதிய வைத்துள்ளார் பா.ஜ.,. மாநில தலைவர் அண்ணாமலை.


அதேநேரம் 'மக்கள் மத்தியில் இவ்வளவு எதிர்ப்பு ஏற்படும் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., அரசு ஒருபோதும் மத்திய அரசிடம் தெரிவிக்கவில்லை' என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்து, தி.மு.க.,விற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.


சமணர் படுகை, பல்லுயிர் தலங்கள், தொல்லியல் பகுதி என முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்திற்கான ஒப்பந்தம் விடுக்கப்பட்டபோது தமிழக அரசு இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


இதனால் தான் மத்திய அரசு 15.9.2023ல் தமிழக அரசுக்கு எழுதிய கடித்திற்கு பதிலில், '476 ஏக்கரில் பல்லுயிர் பூங்கா மட்டுமே உள்ளது' என குறிப்பிட்டு முடித்துக்கொண்டது. அதுபோல் 2024 நவம்பரில் தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்த பின் தான் டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தகவல் வெளியாகி போராட்டங்களுக்கு வழிவகுத்தது.


சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சூழ்நிலையை சமாளிக்க நான் முதல்வராக இருக்கும் வரை இத்திட்டத்தை கொண்டுவர விட மாட்டேன் என ஸ்டாலின் உறுதியளித்தார்.


அனைத்து கட்சிகளின் ஆதரவோடு டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

அவசரம் காட்டிய தி.மு.க.,



இதையடுத்து களம் இறங்கிய பா.ஜ., அண்ணாமலை தலைமையில், ஒருபடி மேலே சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி விவசாயிகள், முக்கிய பிரமுகர்களை டில்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க வைத்து திட்டத்தை ரத்து செய்ய வைத்தது. ஆனாலும் விவசாயிகள் திருப்தியடையாததால் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டம் ரத்து உத்தரவை வெளியிட்ட பின் தான் விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.


ஆனால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதால் தான் ரத்து செய்யப்பட்டது என மக்கள் மனதில் பதியவைக்க அமைச்சர் மூர்த்தி மூலம் அன்றைய நாளிலேயே அப்பகுதி முக்கிய பிரமுகர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கையோடு மறுநாளே முதல்வருக்கு பாராட்டு விழாவையும் நடத்தி முடிக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வந்தார்.


டங்ஸ்டன் ரத்து திட்டத்தை பா.ஜ., பிரமாண்டமாக கொண்டாட தயாரான தகவல் வெளியானதால் தி.மு.க., அவசர அவசரமாக பாராட்டு விழாவை நடத்தி முந்திக்கொண்டது.

கெத்து காட்டிய பா.ஜ.,



ஆனால் சற்றும் அசராத பா.ஜ., டங்ஸ்டன் உத்தரவை ரத்து செய்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியையே வல்லாளப்பட்டி கிராமத்திற்கு அழைத்துவந்து மக்களிடம் பேச வைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ரத்து உத்தரவை ஒரு கல்வெட்டாக கொண்டுவந்து கிராம மக்களிடம் வழங்கினர்.


அந்த நிகழ்வில், 'ஸ்டாலின் கூறியது போல் சட்டசபை தீர்மானத்தால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. தமிழக மக்களின் ஊனோடும் உறவோடும் பிரதமர் மோடி கலந்துள்ளார். அவரது அன்பும், அறவழியில் நடந்த விவசாயிகளின் பிரமாண்ட போராட்டமும் தான் திட்டம் ரத்துக்கு காரணம். பா.ஜ., உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக உள்ளது. பிரதமர் மோடி மீது நம்பிக்கை வையுங்கள்' என அண்ணாமலை பேசிய 'டச்' மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,விற்கு 'செக்'



அதேநேரம், 'டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மாநில அரசு எழுதிய கடிதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என சவால் விட்டும், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது மாநில அரசு கையில் தான் உள்ளது' என தி.மு.க.,விற்கு 'செக்' வைத்தும் அண்ணாமலை சென்றுள்ளார்.


அன்று, 'சட்டசபையில் விவாதத்தில் கடிதத்தை வெளியிடுங்கள்' என பழனிசாமி வலியுறுத்தினார். இன்று அண்ணாமலையும் அதையே வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேச வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement