சம்பளம் கேட்டு கையேந்தி நிற்பதா; கால்நடை பராமரிப்பு துறை பணியாளர் அதிருப்தி
மதுரை: கால்நடைத்துறையில் தற்காலிகமாக பணிபுரிபவர்களுக்கு ஜனவரி ஊதியம் வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்காததால் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு கால்நடை பராமரிப்பு துறையில் கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், அமைச்சு பணியாளர்கள் என 6818 பேர் தற்காலிக பணியில் உள்ளோம். 3 ஆண்டுகளுக்கு முன்வரை ஆண்டு தோறும் ஊதியத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதால் ஜனவரி முதல் டிசம்பர் வரை மாத இறுதி நாட்களில் தடையின்றி சம்பளம் வழங்கப்பட்டது.
பின் மாதந்தோறும் சம்பளம் வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதால் சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டது. 2024 ஜூனில் 6 மாதத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு ஜூன் முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்டது. 2025 ஜனவரி முதல் ஜூன் வரைக்கான அரசாணையை டிசம்பர் இறுதி வாரத்திலேயே வெளியிட வேண்டும். இது குறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியும் நேற்று வரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் ஊதியம் பிப்ரவரி முதல் வாரம் தாண்டியே கிடைக்கும்.
ஆண்டுதோறும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலும் ஒரே அரசாணை வெளியிட ஏற்பாடு செய்தால் தாமதத்தை தவிர்க்கலாம் என்றனர்.