லஞ்சத்தை செருப்பில் பதுக்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

1

வால்பாறை; கேரள மாநிலம், அதிரப்பள்ளி ஊராட்சியில், லஞ்சப்பணத்தை செருப்பில் மறைத்த கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி ஊராட்சி உள்ளது. இங்கு, கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் ஜூடூ,46.

மளுக்கப்பாறையில் இருந்து பல கி.மீ., தொலைவில் இருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு, உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்துள்ளதோடு, சான்றிதழ் வழங்க பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், கேரள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில், நேற்று வெற்றிலைப்பாறையை சேர்ந்த ஒருவரிடம், நிலத்துக்கு பட்டா வழங்குவதற்காக, மூவாயிரம் ரூபாய் லட்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி, கிராம நிர்வாக அலுவலருக்கு ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார்.

லஞ்ச பணத்தை வாங்கிய அவர், தன்னுடைய செருப்பில் அதை மறைத்து வைத்தார்.

மறைந்திருந்து இதை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கிராம நிர்வாக அலுவலர் ஜூடூவை, கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement