பல்லடத்தில் மக்காச்சோளம் உற்பத்தி உயர்வு; தேவை அதிகரிப்பால் விவசாயிகள் ஆர்வம்

பல்லடம்; தேவை அதிகரித்துள்ளதால், பல்லடம் வட்டாரத்தில், மக்காச்சோள பரப்பளவும் அதிகரித்துள்ளது.

பல்லடம் வட்டாரத்தில், தென்னை, வாழை , சோளம், மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள், தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

பல்லடம் சுற்று வட்டாரத்தில், விவசாயத்துக்கு அடுத்ததாக, கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. கோழிகளுக்கு தீவனமாக மக்காச்சோளம் இடப்படுகிறது. இதுதவிர, பல்வேறு பயன்பாடுகளுக்காக, மக்காச்சோளத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப, வேளாண்துறை அறிவுறுத்தலின்படி, விவசாயிகள் மக்காச்சோள பரப்பளவை அதிகப்படுத்தி வருகின்றனர்.

பல்லடம் வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த, 2024--25ம் நிதியாண்டின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ், 2,355 கிலோ மக்காச்சோள விதைகள் பல்லடம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டன. கால்நடை, கோழிகளுக்கு தீவனமாகவும், ஸ்டார்ச், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மாவு பொருட்களுக்கும் மக்காச்சோளம் பெரிதும் பயன்படுகிறது.

இதன் காரணமாக, கடந்த நிதியாண்டை காட்டிலும், நடப்பு நிதியாண்டில், மக்காச்சோள சாகுபடி பரப்பளவு, 971.5 ஹெக்டராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட, 219.6 ஹெக்டர் பரப்பளவு உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பல்லடம் வட்டார விவசாயிகள், ஆர்வத்துடன் மக்காச்சோள சாகுபடி செய்துள்ளதால், உற்பத்தித்திறன், 9.1 டன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்காச்சோளத்தின் தேவை அதிகம் உள்ளதால், எதிர்வரும் நாட்களில் உற்பத்தி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement