அமெரிக்காவில் மீண்டும் ஒரு விபத்து; குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய சிறிய விமானம்: மீட்பு பணி தீவிரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது.
சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானமும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், விமானத்தில் பயணித்த 64 பேரும், ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று வீரர்களும் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று (பிப்.,01) மீண்டும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது.
கடந்த 3 நாட்களில் ஏற்பட்ட இரண்டாவது விமான விபத்து இதுவாகும். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பில்டெல்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் வெடித்து சிதறியது. இந்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. பிலடெல்பியாவில் இருந்து மிசவுரியில் உள்ள ஸ்ப்ரிங்பீல்டு நோக்கி விமானம் சென்று கொண்டிருந்த போது, விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு அருகில் தான், பிலேடெல்பியாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. விமானம் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.