இனி, கட்டுவோம் பசுமை கட்டடங்கள்; நீடித்து நிற்கும் இயற்கை வளங்கள்
பசுமை கட்டடங்கள் என்பது, சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து, சக்தி மற்றும் வளங்களை குறைந்த அளவில் பயன்படுத்தி, வடிவமைக்கப்படும் கட்டடங்களாகும்.
இது, பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நீர் மற்றும் மின்சார சேமிப்பு, சோலார் பலகைகள், இயற்கை ஒளி பயன்பாடு போன்றவற்றை அதிகரிக்கிறது.
மறுசுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவதன் வாயிலாக, கார்பன் வெளியீட்டை குறைக்க முடியும்.
இது குறித்து, 'காட்சியா' உறுப்பினர் அன்னாரீனா நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
பசுமை கட்டடங்கள் மண்ணிற்கு ஏற்படும் பாதிப்பையும், கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க உதவுகின்றன. மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி மூலம், நீர் பாதிப்புகளை குறைக்கின்றன.
பசுமை கட்டடங்களை கட்டுவதற்கு ஒளிப்புகுந்த, எடை குறைந்த கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். மூங்கில் போன்ற இயற்கை கட்டுமானப் பொருள், குறைந்த கார்பன் அடையாளம்.
மக்கள் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை, குறைக்கும் கட்டடங்களை விரும்புகின்றனர். அரசும், பசுமை கட்டடங்களை ஊக்குவிக்கும் விதமாக, பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வருங்கால கட்டடத் திட்டங்களில், பசுமை கட்டடங்கள் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு கட்டுமானங்களில், ஒருங்கிணைந்த வாழ்விட மதிப்பீட்டிற்கான பசுமை மதிப்பீடு(ஜி.ஆர்.ஐ.எச்.ஏ.,) மற்றும் இந்திய பசுமை கட்டட கவுன்சில், தரங்களை பின்பற்றிய கட்டடங்கள் அதிகரித்து வருகின்றன. பசுமை கட்டடங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.