புதிதாக வீடு, மனை வாங்க போகிறீர்களா... முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

எ ந்தவொரு மனை அல்லது வீடு வாங்கும்போதும், அந்த மனை வரைபட அனுமதி பெற்றுள்ளதா மற்றும் கட்டட அனுமதி பெற்றுள்ளதா என்பதை, பார்த்து வாங்க வேண்டும். கிரையப் பத்திரத்தில் இடத்தின் அளவு, சர்வே எண், பிளாட் எண் முதலியவை வரைபட அனுமதியில் உள்ளவாறு இருக்கிறதா என்பதையும், பார்க்க வேண்டும்.

அடுக்குமாடி வீட்டை வாங்கும்போது, கிரைய பத்திரத்தில் யு.டி.எஸ்., எனப்படும்பிரிக்க முடியாத இடத்தின் அளவு எவ்வளவு, கிரையப் பத்திரத்தின் உரிமையாளர் பெயர், சர்வே எண் மற்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட பிளாட் எண் ஆகியவை, தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

குறிப்பாக, 'செட்யூல் 'ஏ'ல் மொத்த இடத்தின் அளவுகளும்,'செட்யூல் 'பி'ல் தனக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவுகளும்குறிப்பிடப்பட்டிருக்கும்.

யு.டி.எஸ்., கணக்கிடும்போது, கட்டடத்தின் கட்டுமான அளவை கணக்கிட்டு, 'புளோர் ஸ்பேஸ் இன்டெக்ஸ்'(எப்.எஸ்.ஐ.,) அளவின்படி, யு.டி.எஸ்., பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்துக்கு, கட்டுமான பகுதி, 800 சதுர அடி என்றும், எப்.எஸ்.ஐ.,=2 என்றும் குறிப்பிட்டிருந்தால், யு.டி.எஸ்.,=800/2= 400 சதுர அடியாகும். பத்திரத்தில் யு.டி.எஸ்., பகுதி குறைவாக குறிப்பிட்டிருந்தால், இதில் எங்கோ தவறு உள்ளது; அதை சரிபார்க்க வேண்டும்.

சில வீடுகள் வரைபட அனுமதிப்படி கட்டாமல், விதிகளை மீறி கூடுதலாக கட்டப்பட்டிருக்கும்.

அந்த வீடுகளை வரன்முறை செய்ய, யு.டி.எஸ்., அளவுகளை குறைவாக குறிப்பிட்டு இருப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வாங்கும்போது, மொத்தம் எத்தனை வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, விற்பனையின்போது அங்கு யு.டி.எஸ்., அளவின்படி, எத்தனை வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது, வீட்டை வாங்கும்போது எத்தனை வீடுகள் கட்டியுள்ளார்கள், ஏதேனும் விதிமுறை மீறப்பட்டுள்ளதா என்பதை, கவனிக்க வேண்டும்.

கட்டுனர் புரிந்துணர்விலும், இத்தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, கட்டுமானத்திற்கான விவரக்குறிப்பிலும் பொது உபயோகம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும்.

கட்டட அனுமதி பெறப்பட்டு, தகுதி வாய்ந்த கட்டட வடிவமைப்பாளர்,பொறியாளர் மற்றும் கட்டுனர் கொண்டு கட்டப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்துகொண்டால், வாங்குபவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்கின்றனர் பொறியாளர்கள்.

Advertisement