கட்டுமானங்களில் பல வகை; பிரகாசிக்குது கட்டடக்கலை
கட்டுமான துறையில் புகுத்தப்படும் நவீனங்களால் பணிகள் சுலபமாவதுடன், தரமும் கூடிக்கொண்டே செல்கிறது. இதில், 'ஆர்க்கிடெக்ட்' எனப்படும் கட்டடக் கலை நிபுணர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது; கட்டடத்தை அழகூட்டுவதும்கூட.
அந்தவகையில், கட்டட கலைஞர்கள் தற்போது தங்கள் துறையில் மேலும் பல வகையான, சிறப்பு ஆலோசகர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தற்காப்பு கட்டடக்கலை, புதுமையான கட்டடக்கலை, பாரம்பரிய கட்டடக்கலை, எதிர்கால கட்டடவியல், மக்கள் பழக்க வழக்கங்கள் சார்ந்த கட்டடக்கலை, நில வடிவமைப்புக்கலை என, பல துறைகளாக இவர்கள் பெருகி உள்ளனர்.
வீடு, வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு சிறப்புகளில் ஏதாவது ஒரு துறையில் தங்களை ஐக்கியப்படுத்தி இவர்கள் சேவைபுரிகின்றனர். கட்டட அமைப்பு முறைகளை விளக்கி வரைபடங்களை தயாரிக்கின்றனர். கட்டடத்தின் சிறப்புகளுக்கேற்ப கட்டட அமைப்பு கலைஞர்களை தேர்வு செய்ய வேண்டும். இல்லையேல் கட்டடம் சிறப்பு வாய்ந்ததாக அமைய வாய்ப்பில்லை. கட்டட கலைக்கென்று 'பட்ஜெட்' தனியே ஒதுக்கிக்கொள்வது நல்லது.
கட்டட கலைஞர் கற்பனை செய்து தயாரித்த வரைபடங்களின் உட்புற, வெளிப்புற தோற்றங்களை அவரின் அனுமதியின்றி, கட்டட உரிமையாளரோ, களப்பொறியாளரோ மாறுதல் செய்யக்கூடாது. கட்டட கலைஞர்கள் தங்கள் பயன்பாட்டின் வரம்பினை, கட்டட ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்த வேண்டியதும் இன்றைய தேவையாக உள்ளது.