நீங்கள் வாங்கிய வீட்டுக்கான பட்டா எண் மாறி இருந்தால் என்ன செய்வது?

புதிதாக வீடு, மனை வாங்கும் போது அது தொடர்பான பரிமாற்ற ஆவணங்களை முழுமையாக சரி பார்ப்பது அவசியம். குறிப்பாக, ஆவணங்கள் என்றால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவான பத்திரங்களை மட்டும் முழுமையாக ஆய்வு செய்தால் போதாது. பத்திரத்தில் காணப்படும் விபரங்கள், பட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் ஒத்து போக வேண்டும்.

பொதுவாக ஒரு வீடு அல்லது மனை விற்பனைக்கு வருகிறது என்ற தகவல் கிடைத்து, நீங்கள் அது தொடர்பாக விசாரிப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும். சொத்து விற்பனை தொடர்பாக முதலில் யார் உங்களிடம் பேசுகின்றனர் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இதில், சொத்தின் முறையான உரிமையாளர் நேரடியாக பேசுகிறார் என்ற நிலையில் ஓரளவுக்கு நம்பகத்தன்மை ஏற்படும். அதுவும், அவர் தான் உண்மையான உரிமையாளர் என்பதை உறுதி செய்த பின்னரே முழுமை பெறும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தற்போதைய சூழலில், பெரும்பாலான இடங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், நேரடியாக உரிமையாளரை சந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், தரகர்கள் சொல்வது தான் விலை என்ற நிலையில் வீடு, மனை வாங்குவோர் பாதிக்கப்படுகின்றனர்.

சொத்தை விற்கும் நிலையில், அதன் உரிமையாளரை நேரடியாக சந்தித்து பேசினால் தான் உண்மை நிலவரம் தெரிய வரும். அதிலும், தற்போது உரிய அடையாள ஆவணங்கள் வாயிலாக உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

சொத்தின் முந்தைய பரிமாற்றங்கள் தொடர்பான பத்திரங்களை ஆய்வு செய்யும் போது, சர்வே எண், பரப்பளவு போன்ற தகவல்களை சரி பார்க்கிறோம். அப்போது, அந்த சொத்துக்கான பட்டா எண் என்ன? அதன் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் என்ன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் பெரும்பாலான இடங்களில் பத்திரங்களையும், அதில் உள்ள விபரங்களையும் சரி பார்த்து சொத்தை வாங்கி விடுகின்றனர். அதன் பின் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது தான், அதில் வேறுபாடுகள் காணப்படுவது தெரிய வருகிறது.

நீங்கள் வாங்கிய சொத்துக்க்கான பட்டா எண் மாறுபட்டு இருப்பது தெரியவந்தால், அதில் என்ன நடந்துள்ளது என்பதை வழக்கறிஞர் வாயிலாக ஆய்வு செய்யுங்கள். பட்டாவில் உள்ள சொத்தும், பத்திரத்தில் உள்ள சொத்தும் ஒன்றா அல்லது வேறுபட்டதா என்று பாருங்கள்.

இதில் சொத்து மாறுபடாமல் பட்டா எண் மட்டும் மாறுபட்டிருந்தால், அதை உரிய துறையில் விண்ணப்பித்து சரி செய்யலாம். ஆனால், சொத்து வேறுபட்டு இருந்தால், அதனால் ஏற்படும் சிக்கல்களை நீங்கள் தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

வேறு சொத்துக்கான பட்டா எண்களை தவறாக பயன்படுத்தி இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டு இருந்தால், அது குறித்து நில மோசடி பிரிவில் புகார் அளிக்கலாம். பதிவுத் துறையிலும் புகார் அளித்து, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Advertisement