ரியல் எஸ்டேடட் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்ன?
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகின்றன. இயல்பான வேலையை இன்னும் மிக எளிதாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மக்களிடம் அதிக ஆதரவு பெறுகின்றன.
இந்த வகையில் தற்போதும் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முத்திரை பதித்து வருகிறது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மனிதர்கள் இருந்து செய்ய வேண்டியதை தானாகவே நடத்தி முடிப்பதில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாக செய்கிறது.
இந்த வகையில் ரியல் எஸ்டேட் துறையில் எந்தெந்த இடங்களில் செயற்கை நுண்ணறிவு வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
இன்றைய சூழலில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு இணையம் மட்டுமல்லாது பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றன.
இத்தளங்களில் ஒரே ஒரு முறை ஒரு நபர் நுழைந்தால் போதும், அவரது இதற்கு முந்தைய தேடல்கள் அடிப்படையிலான விபரங்கள் திரட்டப்பட்டுவிடும். இதன் அடிப்படையில் அவரது தேடலுக்கு தேவையான பரிந்துரைகள் தானாக கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, ஏதாவது ஒரு சமூக வலைதளங்களில் வரும் ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரங்களில் ஏதாவது ஒன்றில் நீங்கள் நுழைந்து பார்த்து இருக்கலாம். அதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு வசதி, உங்களது இந்த நுழைவை அடிப்படையாக வைத்து உங்களது தேடலை தானாக புரிந்து கொள்ளும்.
அடுத்து, இதற்கு ஏற்ற பிற நிறுவனங்களின் திட்டங்கள் உங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். இதனால், வீடு தேடும் மக்களுக்கு குறுகிய காலத்தில் அதிகபட்ச திட்டங்கள் குறித்த விபரங்கள் எளிதாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதே போன்று ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் திட்டம் குறித்த விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவு வசதிகளை பயன்படுத்த துவங்கியுள்ளன. குறிப்பாக, ஒரு நிறுவனத்தின் குடியிருப்பு திட்டம் குறித்து விசாரிக்க வரும் நபருக்கு அதிகபட்ச விபரங்கள் கிடைப்பதை இந்த வசதி உறுதி செய்கிறது. எதிர் முனையில் மனிதர்கள் இருந்து கலந்துரையாடுவது போன்ற குரல் வழி சேவையும், டெக்ஸட் வாயிலாகவும் குடியிருப்பு திட்ட விபரங்களை வழங்குவதில் இந்த வசதி பேருதவியாக உள்ளது.
புதிய திட்டங்கள் குறித்த விபரங்களை மக்களுக்கு வழங்கவும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கவும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.