போவோமா ஊர்கோலம் .... பூலோகம் எங்கெங்கும்...
''மெட்ரோ நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஜன்னல் வழியே, வெளியுலகை அவ்வப்போது எட்டிப்பார்ப்பதும், வாக்கிங் செல்லும் சொற்ப நிமிடங்களில் வேடிக்கை பார்ப்பதுமாக, ஒவ்வொரு நாளையும் கழிக்கும் செல்லப்பிராணிகளை, ஜாலியாக டூர் அழைத்து செல்ல திட்டமிட்டு, 'பா அட்வென்சர்' நிறுவனம் துவக்கப்பட்டது.
இதற்கு, நல்ல வரவேற்பு இருப்பதோடு, செல்லப்பிராணிகளும் மகிழ்ச்சியாக இருப்பதை உணர முடிகிறது,'' என்கிறார், அதன் நிறுவனர் ஷர்வில்.
'செல்லமே' பக்கத்திற்கு இவர் நம்மோடு பகிர்ந்தவை:
மும்பையை தலைமையிடமாக கொண்டு, 2020 ல், 'பா அட்வென்ச்சர்' (Paw Adventure) நிறுவனம் துவக்கினோம். கொரோனா தொற்றுக்கு பின், வீட்டிற்குள் முடங்கி கிடந்த செல்லப்பிராணிகளை, ஊர் சுற்ற அழைத்து செல்ல திட்டமிட்டோம். இதற்காக இந்தியா முழுக்க, செல்லப்பிராணிகளை சுற்றுலா அழைத்து செல்ல தகுதியான இடங்களை ஆய்வு செய்தோம்.
முதலில், என் பப்பி, க்யூரோவுடன் தான், வெளியூர்களுக்கு சென்றேன். நண்பர்களும் அவர்களின் செல்லங்களுடன் இணைந்தனர். தற்போது, இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதோடு, வாடிக்கையாளர்களும் அதிகரித்து கொண்டே வருகின்றனர். செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்ய, ஆரம்பத்தில் ரயில்வே சேவையை தான் அதிகம் பயன்படுத்தினோம். முன்பதிவு செய்தால், பயண அலுப்பே தெரியாமல், ஊர் சுற்றலாம். தற்போது, செல்லப்பிராணிகள் பயணிக்க தகுந்தவகையில், பேருந்து வசதி ஏற்படுத்தியிருக்கிறோம்.இதில் பயணிக்கும் போது, அவைகளின்முகத்தில் ஏற்படும் மலர்ச்சிக்கு அளவே இருக்காது. விரைவில், வெளிநாட்டு பயணங்களுக்கும் திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில், வயநாடு, கோவா, சிம்லா, மணாலி உள்ளிட்ட, பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம். பப்பியின் ஹெல்த் ரிப்போர்ட் பெற்ற பிறகே, பயணத்திற்கு அனுமதிக்கிறோம். இப்படி, புதிய இடங்களுக்கு அழைத்து செல்வது, பிறருடன் பழக அனுமதிக்கும் போது மட்டுமே, பப்பியின் மன அழுத்தம், பயம், கோபம் போன்ற உணர்வுகள் சமநிலையாகும்.
அவை, அக்ரசிவ்வாக மாறாது. பிற பப்பிகளை பார்த்தால், அவைகளுக்குள் உணர்வு பரிமாற்றங்கள் நடப்பதை கண்கூடாக காணலாம். மலை, காடு என இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு, பப்பிகளை அழைத்து செல்லும் போது, நீண்ட துாரம் நடத்தல், குழுவாக பிற பப்பிகளுடன் விளையாடுதல் போன்ற செயல்பாடுகள், அவைகளின் உடல் திறனைமேம்படுத்தி, ஆரோக்கியமான மன நிலையை உருவாக்குகிறது. இதுபோன்ற வித்தியாசமானபயணங்கள், புதுவித அனுபவத்தை தருவதாக, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.