உணர்வை துாண்டும் 'உயிரற்றவை!'

''காலத்தை உறையச்செய்யும் கண்ணாடியாக, பசுமையான நினைவுகளின் சாட்சியாக, காணும் போதெல்லாம் கண் முன் விரியும் கற்பனை சித்திரமாக இருப்பவை, சிற்பங்கள் தான். இதிலும், மினியேச்சர் வகையிலான செல்லப்பிராணிகளின் சிற்பங்களை, பலரும் விரும்பி வாங்குகின்றனர்,'' என்கிறார், சென்னை, போரூரை சேர்ந்த ஸ்ரீஹரிசரண்.

'மை க்யூட் மினி' (My Cute Mini) என்ற நிறுவனத்தின் உரிமையாளரான இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

நிஜமான உருவத்தின் நிழலாக இருப்பவை சிற்பங்களும், புகைப்படங்களுமே. இவைகளுக்கு உயிர் இல்லாவிட்டாலும், காணும் போதெல்லாம், புதுவித உணர்வை கடத்தி செல்லும். காலத்தை உறைய வைத்து பழைய நினைவுகளுக்குள் பயணிக்க செய்யும். இதன் நவீன வடிவமாக இருப்பவை மினியேச்சர் எனும், சிறிய அளவுள்ள சிற்பங்கள்.

இந்த மினியேச்சர் வகைகளில் தற்போது டிரெண்டாக இருப்பது, செல்லப்பிராணிகளின் சிற்பங்கள் தான். இதில், செராமிக் மற்றும் பாலி ரெசின் என்ற இரு விதமான மூலப்பொருட்கள் கொண்டு, இரு வேறு விதமான மினியேச்சர்கள் உருவாக்குகிறோம். செராமிக் கொண்டு சிற்பங்கள் செய்யும் போது, நிஜத்தின் சாயலை முழுமையாக காணலாம். பாலி செராமிக்கில், 3டி பிரிண்ட் எடுத்து, காஸ்டிங் செய்து, அழகுக்கு சில வண்ணங்கள் சேர்க்கப்படும்.

குடும்ப புகைப்படத்தில் செல்லப்பிராணிகள் இருப்பது, செல்லப்பிராணிகள் மட்டும் தனியாக இருப்பது, செல்லப்பிராணியுடன் நடந்த நிகழ்வை கூறி அதேபோன்ற சிற்பங்களை உருவாக்கி தருதல் போன்ற மாடல்களில் மினியேச்சர்களை பலரும் விரும்பி வாங்குகின்றனர். இதற்கு புகைப்படம் மட்டும் அனுப்பி வைத்து, சில அடிப்படை தகவல்களை கூறினால் போதும். நான்கு இன்ச் முதல், நான்கு அடி வரை செல்லப்பிராணிகளின் சிற்பங்கள் உருவாக்கி தரப்படும். இவை, உடையாது என்பதோடு, நிறம் மங்காமல் இருக்கும்.

தங்களை விட்டு பிரிந்த, செல்லப்பிராணிகளின் நினைவாக, மினியேச்சர் சிற்பங்களை உருவாக்கி தருமாறு பலரும் கேட்கின்றனர். இச்சிற்பங்கள் நிஜத்தின் சாயலாக இருப்பதால், தங்களின் உணர்வுகளோடு உரையாடுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புக்கு: info@mycutemini.in

Advertisement