உள்ளத்தில் இல்லை தளர்வு; ஆம்புலன்ஸ் மூலம் 11ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி!

7


நீலகிரி: நீலகிரி மாவட்டம் பாட்டவயல் மாணவி ஜாஸ்மின் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 11ம் வகுப்பு தேர்வு எழுத, ஆம்புலன்ஸ் மூலம் தேர்வுக் கூடத்துக்கு அழைத்து வரப்பட்டார். அந்த மாணவி சிறப்பாக தேர்வு எழுத பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாட்டவயல் பகுதியைச் சேர்ந்தவர் சைனுதின். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளும், எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலையில், படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும், தாய் மற்றும் தந்தை இணைந்தே செய்து தர வேண்டிய நிலை உள்ளது.



அவர்களின் இரண்டாவது மகள் ஜாஸ்மின் (வயது 17). இவர் பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று 11ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், மாணவி ஜாஸ்மின் ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து மாணவியை தேர்வு அறைக்கு, ஸ்ட்ரச்சர் மூலம் அழைத்து சென்றனர்.


பின்னர் தேர்வு அறையில் உதவியாளர் மூலம் தேர்வு எழுதினார். உடல் முழுவதும் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் பொது தேர்வு எழுதிய மாணவி ஜாஸ்மினை ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement