பாரதியார் பல்கலையில் புகுந்தது சிறுத்தை; மாணவர்கள் வெளியேற்றம்!

கோவை: கோவை பாரதியார் பல்கலை வளாகத்திற்குள் இன்று (மார்ச் 05) காலை 8:00 மணிக்கு சிறுத்தை ஒன்று புகுந்தது. அசம்பாவிதம் தவிர்க்க, மாணவர்கள், அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோவை, மருதமலை அருகே, 1,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 133 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. பல்கலையில், 39 துறைகள் செயல்படுகின்றன.
இந்நிலையில், இன்று (மார்ச் 05) காலை 8:00 மணிக்கு பல்கலை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. அருகேயுள்ள அண்ணா பல்கலை மண்டல மையத்துக்கும் சிறுத்தை சென்றது தெரிய வந்துள்ளது. காலை விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வந்திருந்த ஆசிரியர்கள் சிறுத்தை குறித்து தகவல் தெரிவித்தனர். பல்கலை மைதான மாணவர்களும் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்துள்ளனர்.
இதையடுத்து அசம்பாவிதம் தவிர்க்க, பல்கலைக்கு இன்று வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நாளை நடக்க இருந்த விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்காக பயிற்சியில் ஈடுபட்ட வந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலை ஹாஸ்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்கலையில் இன்று நடக்க இருந்த அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது வனத்துறையினர் சிறுத்தையை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

