கடைசி பந்தில் அடித்த சிக்ஸர்: நடுத்தர வர்க்கம் கொண்டாடும் மத்திய பட்ஜெட்; ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கருத்து

2


-நமது நிருபர்-



இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து கோவையை சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கூறியதாவது: அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றவுடன் வெளியிட்ட பல அதிரடி அறிவிப்புகளால் உலக பொருளாதார சூழலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய பொருளாதாரம் கடந்த சில மாதங்களாகவே எதிர்காற்றில் பயணிக்கும் சூழல் இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், நடுத்தர மக்கள் வருமான வரி, ஜி.எஸ்.டி., குறித்து நிவாரணம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இத்தகைய பொருளாதார மேகமூட்டங்களுக்கு இடையே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது போல், கடைசியாக நிர்மலா சீதாராமன் சொன்னது தான் எல்லாருக்கும் உற்சாகம் அளிப்பதாக அமைந்தது. அது, 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற அந்த அறிவிப்பு தான்.



அதாவது, ஒருவருக்கு 12 லட்சம் ரூபாய் வரை, வருவாய் இருந்தால் அவருக்கு வரி கிடையாது. அது ரிபேட் என்ற கணக்கில் வந்து விடும். அதற்கு மேல் ஒருவருக்கு வருவாய் இருந்தால், அவர் வருமானத்தை பொருத்து 'ஸ்லாப்' கணக்கில் வந்து விடுவார். இந்த அறிவிப்பு, நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், உற்சாகத்தையும் பெற்றுள்ளது.


இதன் மூலம் மக்கள் கையில் பணம் புழக்கம் அதிகரிக்கும்; நுகர்வுக்கு அதிகம் செலவழிப்பர். பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியதே. நடுத்தர வர்க்க மக்கள் தொடர்பான ஒரு புள்ளி விவரம் இருக்கிறது.வரி ஆண்டு 2023 -24ல் 7.5 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்தனர். அவர்களில் 87 சதவீதம் பேர், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.



அதாவது, இவர்கள் எல்லோரும் நடுத்தர வர்க்கம் தான். இவர்கள் அனைவருமே, வருமான வரி, ஜி.எஸ்.டி.,யில் ஒரு சலுகை, நிவாரணம் கிடைக்காதா என்று எதிர்பார்ப்பில் இருந்தனர்.கடந்த காலங்களில் பண வீக்கத்துக்கு ஏற்றபடி வரம்பை அதிகரிக்கவில்லை. இதற்கு முன் 1997ம் ஆண்டு தான் வருமான வரியில் பெரிய அளவுக்கு சலுகை அறிவிப்பு வந்தது. அதற்கு பிறகு இப்போது தான் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அரசின் மூலதன செலவுக்கான ஒதுக்கீடு 10.18 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11.2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வரக்கூடிய வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போனால், டி.டி.எஸ்., பிடித்தம் என்று இருந்ததை ஒரு லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளனர்.



வாடகை கொடுக்கும்போது, 2.4 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் டி.டி.எஸ்., பிடித்தம் செய்ய வேண்டும் என்று இருந்ததை 6 லட்சம் ரூபாயாக மாற்றியுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு, ஊரக பெண்களை தொழில் முனைவோர் ஆக மாற்றும் திட்டம், உள் கட்டமைப்பு ஏற்படுத்தவும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நோக்கில், தேசிய திறன் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு உற்சாகம் அளிக்கும் பட்ஜெட். பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான பட்ஜெட். நேர்மறையான தாக்கம் அதிகரிக்கும். சந்தையில் நுகர்வு அதிகரிக்கும் வாய்ப்புகளை இந்த பட்ஜெட் அதிகரிக்கும்.
இவ்வாறு ஆடிட்டர் கார்த்திகேயன் கூறினார்.

- ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்

Advertisement