மகா கும்பமேளாவுக்கு 77 நாடுகளின் தூதர்கள் வருகை
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் 77 நாடுகளின் தூதர்கள் இன்று புனித நீராடினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
பிப்ரவரி 26 வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 77 நாடுளின் தூதர்கள் மகா கும்பமேளாவில் இன்று கலந்து கொண்டனர்.
விமானம் மூலம் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த அவர்கள், பின்னர் அங்கிருந்து பஸ்கள் மூலம் மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, அரசு சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெளிநாட்டு துாதர்கள் கூறியதாவது:
இந்தியாவுக்கான ஸ்லோவாக் தூதர் ராபர்ட் மாக்சியன் கூறுகையில், 'நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த மகத்தான ஆன்மிக நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக அரசுக்கு வாழ்த்துக்கள். அமைதி, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், இந்த நாள் மிகவும் அழகான நாளாக மாறி உள்ளது. நான் இந்தியாவின் ரசிகன். இந்தியாவின் வரலாறு, கலாசாரம், யோகா உள்ளிட்டவற்றை நான் நேசிக்கிறேன். இந்தியா எனது இரண்டாவது வீடு போன்றது என்றார்.
அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ கூறுகையில், இந்த முக்கியமான விழாவில் பங்கேற்று மரபுகளைப் பின்பற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
ஜிம்பாப்வே தூதர் ஸ்டெல்லா நொகோமோ கூறுகையில், இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம்., இது இந்தியாவை ஆழமாகப் புரிந்துகொள்ள முயலும் ஒரு கலாசார ராஜதந்திரம். எங்களை வரவேற்ற உத்தரபிரதேச மாநிலத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றார்.
பொலிவியா துாதர் கிறிஸ்டியன் வில்லாரியல் கூறுகையில், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தீபாவளிக்கு அழைக்கப்பட்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது, ஆனால் இந்த சந்தர்ப்பத்துடன் ஒப்பிட எதுவும் இல்லை. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதுபோன்ற நிகழ்வை என் மகன்களால் கூட பார்வையிட முடியாது என்றார்.
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பத்தில் இன்று 54 லட்சம் பேருக்கம் அதிகமான பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் மாய சரஸ்வதியின் புனித சங்கமத்தில் நீராடினர்.