மாவூற்று வேலப்பர் கோயிலில் வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல் தீராத வினை தீர்க்கும் வற்றாத சுனைநீரை பாதுகாப்பது அவசியம்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ேகாயில் வளாகத்தில் கூடுதல் வசதிகள் செய்திட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தெப்பம்பட்டியை அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பாகும். விரதம் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனையில் நீராடி வேலப்பரை வழிபடுவதால் தீராத வினைகள் தீரும் என்பதை நம்பிக்கையாக கொண்டுள்ளனர்.
பக்தர்கள் வருகைக்கு ஏற்ப வசதி இல்லை
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழா, அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நடைபெறும் விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். தை, ஆடி, புரட்டாசி அமாவாசை, மாதாந்திர கார்த்திகை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது கோயில் வளாகத்தில் பழுதான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதி கோயில் நிர்வாக்தினர் செய்துள்ளனர். நாளுக்கு நாள் பெருகும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகள் இங்கு இல்லை. குறுகிய இடமாக உள்ள சுனையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும்போது அனைவருக்கும் சிரமம் ஏற்படுகிறது. மலைக்கோயில் செல்ல ஒரு வழிப்பாதையாக இருப்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் விட்டு செல்லும் குப்பையை மலைப்பகுதியில் அப்புறப்படுத்த முடியாமல் வனத்துறை, கோயில் நிர்வாகம் திணறுகின்றன. கோயில் வளாகத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பக்தர்கள் கூறியதாவது:
சுனையில் குளிக்க தனித்தனி வசதி இல்லை
நவநீதன், தேனி: கோயிலில் விசேஷ நிகழ்ச்சி நடத்துபவர்கள் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்துள்ளது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு போதுமான மண்டப வசதி இல்லை. மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். விசேஷ நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடும் போது, ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனித்தனி இட வசதி இல்லை. பெண்கள் உடை மாற்றுவதற்கும் சிரமம் உள்ளது. கோயில் வளாகத்தில் ஆண்டு முழுவதும் சுனையில் கிடைக்கும் நீரை தேக்குவதற்கு குளம் அமைத்து குளத்தில் பக்தர்கள் நீராடுவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.
கூட்டம் அதிகமாகும்போது புனிதம் பாதிப்பு
முத்து இருளன், ஏத்தக்கோவில்: தற்போதுள்ள கழிப்பறை வசதி கூட்டம் அதிகமாகும் நாட்களில் போதுமானதாக இல்லை. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். சுனை அருகே கூட்டம் அதிகமாகும் போது அசுத்தமாக்கி புனிதத்தை கெடுத்து விடுகின்றனர். பக்தர்கள் கோயில் வளாகத்திற்கு கொண்டுவரும் பொருட்களுக்கு வனத்துறை, கோயில் நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். முடி காணிக்கை மண்டபம் அத்திமரத்தடியில் ஆண்டு முழுவதும் சுனையாகவும், மழைக்காலத்தில் அருவியாகவும் வரும் நீரை தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும். சுனையில் வரும் மூலிகைத்தன்மையுள்ள புனிதமான நீரை பக்தர்கள் அனைவரும் சுத்தமான முறையில் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
வளர்ச்சி பணிகளுக்கு மதிப்பீடு
கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: கோயில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக பொங்கல் மண்டபம், திருமண மண்டபம் தேவையான இடங்களில் சிமென்ட் தளம் ஆகியவை அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மலைக் கோயிலுக்கு செல்லும் பாதையை இரு வழி பாதையாக்கவும் இதற்கான செலவுகளை உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் கோயிலில் குவியும் குப்பை வனத்துறையினர் உதவியுடன் அகற்றப்படும்.கோயில் பகுதிக்கு பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோயில் வளாகத்தில் குளம் அமைத்து நீரை தேக்கி பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் இவ்வாறு தெரிவித்தனர்.
தீர்வு வசதிகளை மேம்படுத்துங்கள்
பழமையும், பாராம்பரியமான இக் கோயிலுக்கு தற்போது அனைத்து விசேஷ நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால் ஹிந்து அறநிலைய துறை தேவையான அடிப்படை வசதிகள் செய்திடுவது அவசியம். வற்றாத சுனையில் இருந்து வரும் புனித நீரை குளம்போல் தேக்கி பயன்படுத்த திட்டம் வகுக்க வேண்டும். பக்தர்கள் வருகையில் ஏற்படும் பாலிதீன் குப்பை வனப்பகுதியில் சேரமால் தடுக்க திட்டமிட வேண்டும்.