அலங்கார மலர் செடிகள் உற்பத்தி: வேளாண் துறை அசத்தல்

அலங்கார மலர் செடிகளை உற்பத்தி செய்து பல லட்ச ரூபாயை புதுச்சேரி வேளாண் துறை மிச்சப்படுத்தி வருகிறது. புதுச்சேரி வேளாண் துறை சார்பில், வருடம் தோறும் தாவரவியல் பூங்காவில் காய், கனி, மலர் கண்காட்சி நடந்து வருகிறது.

கண்காட்சியை புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து பல ஆயிரம் பேர் காண்பதற்காக வருகை தருவர். கண்காட்சி வளாகத்தையே அழகுபடுத்தும் விதமாக குளிர் சீதோஷ்ண நிலையில் வளரும் ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து பல்வேறு அலங்கார மலர் செடிகளை ஆயிரக்கணக்கில் வாங்கி வந்து அமைப்பர்.

கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் இந்த அழகு மலர் செடிகளை கண்டு மெய் மறந்து ரசிப்பர். இந்த செடிகளை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வர பல லட்சம் ரூபாயை வேளாண்துறை செலவிட்டு வந்தது.

செலவினை குறைக்கும் விதத்தில் அதிகாரிகள் எடுத்த முயற்சியால் இந்த மலர் செடிகளின் விதைகளை மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்து புதுச்சேரியில் குளிர்காலமான நவம்பர் துவங்கி ஜனவரி வரை செடிகளை உற்பத்தி செய்து கண்காட்சி அமைப்பதை சில ஆண்டுகளாக வேளாண் துறை செய்து வருகிறது.

இதனால் பல லட்ச ரூபாய் வேளாண் துறைக்கு மிச்சமானது. வரும் ஏழாம் தேதி துவங்கும் மலர் கண்காட்சிக்காக லாஸ்பேட்டை வேளாண் தோட்டக்கலை பிரிவு நர்சரியில்ஜினிய, செலோஸ்ஷியா, சால்வியா, பெட்டுனியா, வெர்பினா, டொரோனியா, டயான்டஸ், பால்சம், காஸ்மஸ், கேலன்டுலா, வின்கா, ஸ்னாப்டிராகன், காம்ப்ரினா, மேரிகோல்டு உள்பட 20 வகையான 35 ஆயிரம் மலர் செடிகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கு செல்பவர்கள் இந்த அலங்கார மலர் செடிகளை கண்டு ரசிக்கலாம்.

Advertisement