நெல் அறுவடை பணி துரிதம் வைக்கோலுக்காக வியாபாரிகள் வருகை

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் நெல் அறுவடை தீவிரம் அடைந்ததையடுத்து வைக்கோல் வாங்க கேரளா, தேனி வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் பத்தாயிரம் ஏக்கரில்கோ 50, கோ 51, என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., அட்சயா, அண்ணா ஆர்4 உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையை நம்பி நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளனர். கிராமப்புறங்களில் அறுவடையின் போது கிடைக்கும் வைக்கோலை அந்தந்த பகுதி கால்நடை வளர்ப்பவர்களே சேகரிப்பது வழக்கம்.

ஆனால் நெல் நடவில் செலவீனம் அதிகரித்ததை தொடர்ந்து வைக்கோலையும் விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் வைக்கோல் கட்டுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.

ஒரு கட்டு வைக்கோல் விவசாயிகளிடம் இருந்து 40 ரூபாய் என கேரளா, தேனி வியாபாரிகள் வாங்கி அவற்றை வைக்கோல் சுருட்டும் இயந்திரம் மூலம் சுருட்டி லாரிகளில் கேரளா கொண்டு சென்று ஒரு கட்டு 200 ரூபாய் என விற்பனை செய்கின்றனர்.

வியாபாரிகள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 40 கட்டு வைக்கோல் வரை கிடைக்கும், விவசாயிகளுக்கு ஒரு கட்டிற்கு 40 ரூபாய், சுருட்டும் இயந்திரத்திற்கு 40 ரூபாய், ஏற்றி இறக்க 20 ரூபாய், வண்டி வாடகை 40 ரூபாய் என ஒரு கட்டிற்கு 150 ரூபாய் வரை செலவாகும்.

அதில் 50 ரூபாய் லாபம் வைத்து கேரளாவில் விற்பனை செய்கிறோம், கேரளாவில் வைக்கோலின்தேவை அதிகம் என்பதால் எவ்வளவு கொண்டு சென்றாலும் விற்பனையாகி விடும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அறுவடை நடந்து வருவதால் இங்கு வந்து வைக்கோல் கட்டு வாங்கிச் செல்கிறோம், என்றனர்.

Advertisement