மகளை கொல்ல முயற்சி 'பாசக்கார' தாய் கைது

மூங்கில்துறைப்பட்டு: காதலை கை விட மறுத்த மகளுக்கு முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மனைவி மல்லிகா,47; இவர்களின் 20 வயது மகள் தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். ஆனால், மகள் தன் காதலை கைவிட மறுத்தார். ஆத்திரமடைந்த மல்லிகா, நேற்று முட்டை பொறியலில் எலி பேஸ்ட் கலந்து, மகளுக்கு சாப்பிட கொடுத்தார். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.

அதன்பிறகு மல்லிகா, மகளுக்கு விஷம் கொடுத்த தகவலை உறவினர்களுக்கு தெரிவித்தார். உடன் அவர்கள், மாணவியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீசார் மாணவியிடம் வாக்குமூலம் பெற்று, தாய் மல்லிகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement