ஆக்கிரமிப்புகளை அகற்ற தயங்கும் அதிகாரிகள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை கடமைக்கு அகற்றி உள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஏற்கனவே அகற்றிய இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஜரூராக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டையில் 15 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது. நகர் முழுவதும் உச்ச கட்ட ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. சமூக ஆர்வலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து நகராட்சி நெடுஞ்சாலைத்துறை வருவாய் துறை போலீஸ் ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து ஆலோசனை செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் பலர் தாமாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

பின்னர் 2 மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, வருவாய் துறை, போலீசார் உட்பட, 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு நகரின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. முதற்கட்டமாக ரோடு ஓர ஆக்கிரமிப்புகள், நடைபாதை ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றினர். அதன்பின் குறிப்பிட்ட நாட்கள் கழித்து 2, 3 ம் கட்ட ஆக்கிரமிப்புகள் நடத்தப்படும் என நெடுஞ்சாலை துறையினர் கூறினர்.

ஆனால் தொடர்ந்து இடைவெளி விட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வரமாட்டார்கள் என ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் 2 ம் கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால் நகர் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement