இந்திய அணி இமாலய வெற்றி: கோப்பை வென்று அசத்தல்: அபிஷேக் 'சூறாவளி' சதம்


மும்பை: ஐந்தாவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி, 150 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. வாணவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா, 37 பந்தில் சதம் விளாசினார். தொடரை 4-1 என கைப்பற்றிய இந்தியா, கோப்பை வென்றது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின. இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், ஐந்தாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதில் முகமது ஷமி இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.


சாம்சன் காயம்: இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அதிரடி துவக்கம் தந்தனர். ஆர்ச்சர் வீசிய முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். மூன்றாவது பந்து, இவரது வலது கை ஆள்காட்டி விரலில் தாக்கியது. சிறிது நேர சிகிச்சைக்கு பின் ஆட்டத்தை தொடர்ந்தார். 5, 6வது பந்தில் சாம்சன் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, முதல் ஓவரில் 16 ரன் கிடைத்தது. மார்க் உட் பந்தில் சாம்சன்(16) அவுட்டானார்.


சிக்சர் மழை: இதற்கு பின் அபிஷேக் ஆட்டம் ஆரம்பமானது. யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார். இவரது சிக்சர் மழையில் வான்கடே மைதானம் அதிர்ந்தது. ஓவர்டன் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசிய இவர், 17 பந்தில் அரைசதம் எட்டினார். இந்த ஓவரில் திலக் வர்மா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 25 ரன் எடுக்கப்பட்டன. திலக் வர்மா, 24 ரன்னில் வெளியேறினார். கார்ஸ் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட அபிஷேக் மின்னல் வேகத்தில் சதம் (37 பந்து) எட்டினார். கேப்டன் சூர்யகுமார் (2) மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த ஷிவம் துபே விளாச, ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. துபே, 30 ரன் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா (9), ரிங்கு சிங் (9) நிலைக்கவில்லை.


காம்பிர் பாராட்டு:தனிநபராக மிரட்டிய அபிஷேக் சர்மா, தொடர்ந்து சிக்சர், பவுண்டரி விளாச, இந்திய அணி 16 ஓவரில் 202/6 ரன்னை எட்டியது. ரஷித் 'சுழலில்' அபிஷேக் (54 பந்தில் 135 ரன், 7 பவுண்டரி, 13 சிக்சர்) அவுட்டானார். இவரது ஆட்டத்தை பயிற்சியாளர் காம்பிர், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினர். அக்சர் படேல், 15 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன் எடுத்தது.


ஷமி நம்பிக்கை: கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சில் சிதறியது. பில் சால்ட் மட்டும் 55 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, 10.3 ஓவரில் 97 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. இந்தியா சார்பில் 'வேகத்தில்' அசத்திய ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார்.



இரண்டாவது வீரர்


'டி-20' அரங்கில் அதிவேக அரைசதம் (17 பந்து) அடித்த இரண்டாவது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா. முதல் இடத்தில் யுவராஜ் சிங் (12 பந்து, எதிர், இங்கிலாந்து, டர்பன், 2007) உள்ளார்.


37 பந்து
ஐ.சி.சி., முழு அந்தஸ்து பெற்ற அணிகள் வரிசையில், 'டி-20' போட்டியில் அதிவேக சதம் அடித்த மூன்றாவது வீரரானார் அபிஷேக் சர்மா (37 பந்து). முதல் இரு இடத்தில் (தலா 35 பந்து) தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் (எதிர், வங்கம், 2017), இந்தியாவின் ரோகித் சர்மா (எதிர், இலங்கை, இந்துார், 2017) உள்ளனர்.


* 'டி-20' இன்னிங்சில் அதிவேகமாக (10.1 ஓவர்) சதம் எட்டிய வீரரானார் அபிஷேக் சர்மா. இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் 10.2 ஓவர் முடிந்த நிலையில் சதம் (எதிர், வெ.இ., செஞ்சுரியன், 2023) எட்டியிருந்தார்.
135 ரன்
'டி-20' போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என சாதனை படைத்தார் அபிஷேக் (135). அடுத்த இடத்தில் சுப்மன் கில் (126*, எதிர், நியூசி., 2023, ஆமதாபாத்) உள்ளார்.

13 சிக்சர்
'டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா(13). அடுத்த இடத்தை தலா 10 சிக்சருடன் ரோகித் (எதிர், இலங்கை, 2017, இந்துார்), சாம்சன் (எதிர், தென் ஆப்ரிக்கா, டர்பன், 2024), திலக் வர்மா (எதிர், தென் ஆப்ரிக்கா, ஜோபெர்க், 2024) பகிர்ந்து கொண்டுள்ளனர்.

247/9 ரன்
இந்திய அணி, 'டி-20' அரங்கில் தனது நான்காவது அதிகபட்ச ஸ்கோரை (247/9) நேற்று பதிவு செய்தது. முதல் மூன்று ஸ்கோராக 297/5 (எதிர், வங்கம், ஐதராபாத், 2024), 283/1 (எதிர், தென் ஆப்ரிக்கா, ஜோபெர்க், 2024), 260/5 (எதிர், இலங்கை, இந்துார், 2017) உள்ளன.


* இது, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் (247/9) அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 224/2 ரன் (ஆமதாபாத், 2021) எடுத்திருந்தது.
இது அதிகம்

'டி-20' போட்டியின் 'பவர் பிளே' ஓவரில் (முதல் 6 ஓவர்) நேற்று இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரை (95/1) பதிவு செய்தது. இதற்கு முன் ஸ்காட்லாந்துக்கு எதிராக 82/2 ரன் (2021, துபாய்) எடுத்திருந்தது.


தொடரும் சர்ச்சை
புனேயில் நடந்த நான்காவது 'டி-20' போட்டியில் இங்கிலாந்தின் ஓவர்டன் வீசிய பந்து, இந்திய பேட்டிங் 'ஆல் ரவுண்டர்' ஷிவம் துபே 'ஹெல்மெட்' மீது பலமாக தாக்கியது. மூளை அதிர்ச்சி காரணமாக, பீல்டிங் செய்ய துபே வரவில்லை. மாற்று வீரராக, வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா களமிறங்கினார். 3 விக்கெட் சாய்த்து வெற்றிக்கு உதவினார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' அஷ்வின் கூறுகையில்,''சர்வதேச போட்டி என்பதை மறந்து, ஐ.பி.எல்., போல விளையாடினர். ஷிவம் துபேவுக்கு நிகரான மாற்று வீரர் ரமன்தீப் சிங் தான். அவர் இருக்கும் போது, ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது ஏன் என புரியவில்லை. இதை கிரிக்கெட் தப்புக்கணக்கு எனலாம். அம்பயர் அல்லது 'மேட்ச் ரெப்ரி' தரப்பில் தவறு நடந்திருக்கலாம். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20' போட்டியில் ஜடேஜாவுக்கு பதில் சகால் தான் மாற்று வீரராக வந்தார். இருவரும் 'ஸ்பின்னர்' என்பதால் பிரச்னை இல்லை. இம்முறை இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது போல இந்தியாவுக்கும் ஒருநாள் பாதிப்பு ஏற்படலாம்,''என்றார்.


இச்சம்பவத்தை மறக்காத இங்கிலாந்து கேப்டன் பட்லர் நேறறைய 'டாஸ்' நிகழ்வின் போது கூறுகையில்,''இப்போட்டிக்கு எங்களது அணியில் நான்கு 'இம்பேக்ட்' மாற்று வீரர்கள் உள்ளனர்,''என்றார்.

'மெகா' வெற்றி
'டி-20' அரங்கில் ரன் அடிப்படையில், இந்தியா தனது இரண்டாவது பெரிய வெற்றியை (150 ரன்) பதிவு செய்தது. முதலிடத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இமாலய வெற்றி (168 ரன் வித்தியாசம், ஆமதாபாத், 2023) உள்ளது.

Advertisement