ஆயிரம் சந்தேகங்கள்: பழைய வரி விதிப்பு முறை பற்றி பட்ஜெட்டில் எந்த தகவலும் இல்லையே?
எனக்கு வயது 77. கடந்த 2012லிருந்து 3 லட்சத்துக்கு மெடிகிளைம் எடுத்தது, வரும் மார்ச் மாதம் முடிகிறது. ஆயுஷ்மான் பாரத் அட்டை உண்டு. இந்த அட்டை இருக்கும் நிலையில் காப்பீடை புதுப்பிக்க தேவையா? அரசு அளித்த 'ஆபா' அட்டை மதுரையில் எந்தெந்த மருத்துவமனைகளில் உபயோகிக்கலாம் என்ற விபரம் தெரிவித்தால் எல்லோரும் பயனடைவர்.
சுந்தர் சிங், மதுரை
ஆயுஷ்மான் பாரத் அட்டை இருக்கட்டும். கூடவே, மெடிகிளைமுக்கும் பிரீமியம் கட்டுங்கள். உங்கள் வயதைக் கருத்தில்கொண்டு இதைச் சொல்கிறேன். யாருக்கு எந்த நேரத்தில் எந்தவிதமான உடல்நலக் கோளாறு வரும் என்று சொல்வதற்கில்லை.
மருத்துவமனை போகும் சூழல் ஏற்பட்டால், இந்த அட்டை ஏற்கப்படாது, அந்த காப்பீட்டு நிறுவன பாலிசி செல்லாது என்றெல்லாம் சொல்லொண்ணா துன்பங்கள் வரக்கூடும்.
எதற்கு செலவு செய்கிறீர்களோ இல்லையோ, மருத்துவ காப்பீடுக்கு செய்யுங்கள். மூன்று லட்சம் போதாது. அதையும் உயர்த்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். மதுரையில் கிட்டத்தட்ட 150 மருத்துவமனைகளுக்கு மேல் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஏற்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் முழுமையான பட்டியல் என் கண்ணில் தட்டுப்படவில்லை. ஏதேனும் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தால், இந்த அட்டை ஏற்கப்படுமா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
வருமானம் இல்லாத 60 வயதை கடந்த முதியோர் வைப்பு நிதித் திட்டங்களில் எவ்வளவு போடலாம்? டி.டி.எஸ்., வருமான வரி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.
-சக்திவேல், திருவண்ணாமலை
இந்த நிதியாண்டின் புதிய பட்ஜெட்டில் தான் மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான டி.டி.எஸ். வரம்பு 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதே! 7 முதல் 8 சதவீத வட்டியில், தோராயமாக 12 முதல் 14 லட்சம் ரூபாய் வரை வங்கியிலோ, அஞ்சலக வைப்பு நிதித் திட்டங்களிலோ போட்டுவைக்கலாம்.
டி.டி.எஸ்., உயர்த்தப்பட்டுள்ளதால், ஒரு லட்ச ரூபாய் வரை வட்டி பெறுகிறவர்கள், இனிமேல், வங்கிக்குப் படிவம் 15ஜி தாக்கல் செய்ய வேண்டாம் என்பது ஒரு கூடுதல் வசதி.
பட்ஜெட்டில், ஆண்டு வருவாய் 12 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதே. இதற்கு என்ன காரணம்?
ஜெயசாந்தி, மின்னஞ்சல்
மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும் என்பது தான் ஒரே காரணம். அதற்கு மக்கள் கையில் பணம் இருக்கவேண்டும். அந்தப் பணத்தைக் கொடுக்கும் முயற்சி தான் இந்த வரி விலக்கு பிளஸ் வரிக் கழிவு. பல ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.
எந்த ஊழலையும், தப்புத் தண்டாவையும் செய்யாமல், மாதச் சம்பளம் மட்டும் வாங்கும் அப்பாவி மத்தியமர்களுக்கும், பணம் சேமிக்கக் கிடைத்திருக்கும் அரியதொரு வாழ்நாள் வாய்ப்பு இது.
ஆண்டுதோறும், அவரவர் வரி அடுக்குக்கு ஏற்ப 30 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை வரி சேமிப்பு கிடைக்கும்.
இந்த ஆண்டு வரி விலக்கு வரையறை உயர்த்தப்பட்டு விட்டதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதில் எந்த மாற்றமும் நடக்க வாய்ப்பில்லை.
அதனால், வரி செலுத்தாமல் சேமிக்கக்கூடிய ஒவ்வொரு ரூபாயையும் என்னுடையது அல்ல என்று நினைத்துக்கொண்டு, சாமி உண்டியலில் போட்டு வைப்பது போன்று, ஏதேனும் சேமிப்பு, முதலீட்டுத் திட்டத்தில் போட்டு வாருங்கள்.
கையில் தான் பணம் தங்கியிருக்கிறதே என்று தாம்தூம் என்று செலவு செய்து, வீடு முழுதும் எலக்ட்ரானிக் குப்பையை சேர்க்காதீர்கள்.
ரொம்ப காலம் கழித்து, அரசாங்கமே சேமிப்பதற்கான அற்புத வாய்ப்பை வழங்கியிருக்கிறது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பழைய வரி விதிப்பு முறை பற்றி பட்ஜெட்டில் எந்த தகவலும் இல்லையே?
அன்பு அருள்ராஜ்,
மின்னஞ்சல்
இந்த வாரம் வரக்கூடிய புதிய வரி சட்டத்தில் இதுபற்றிய தெளிவு கிடைக்கும். புதிய வரி விதிப்பு முறை வந்தபோதே, பழைய முறை விரைவில் பொலிவிழந்து போய்விடும் என்று சொல்லப்பட்டது.
அதற்கு ஏற்ப, கடந்த ஆண்டே, கிட்டத்தட்ட வரிகட்டுவோரில் 78 சதவீதம் பேர் புதிய வரி விதிப்பு முறைக்கு மாறிவிட்டனர்.
இந்த ஆண்டு வரி விலக்கு பிளஸ் கழிவு 12 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களே, பழையதை விட்டு புதியதற்கு மாறிவிடும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், பழைய வரி விதிப்பு முறை முற்றிலும் நீக்கப்படவில்லை என்று புரிந்துகொள்வதற்கு ஒரு சிறு விஷயம் இந்த பட்ஜெட்டில் தென்படுகிறது.
சிறு குழந்தைகளின் பெயரில் செய்யப்படும் முதலீட்டுக்கான என்.பி.எஸ். வாத்ஸல்யா திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு, பழைய வரி விதிப்பு முறையில் 50 ஆயிரம் ரூபாய் வரை வரிக் கழிவு கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
முதலீட்டாளர்களுக்கு இந்த புதிய பட்ஜெட் எந்த வகையில் பலன் தரும்?
சரண் கார்த்திகேயன்,
வாட்ஸாப்
பட்ஜெட் நாளிலேயே நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பங்குகள் உயரத் துவங்கிவிட்டனவே! அது தான் ஆரம்பம்.
கடந்த 2000க்குப் பிறகு பிறந்தவர்கள் கூடுதலாக பொருட்களை நுகர்வார்கள், அதனால், விற்பனை அதிகரிக்கும், லாபம் பெருகும் என்பது தான் எதிர்பார்ப்பு.
என்னைப் பொறுத்தவரை வேறொரு விஷயம் முக்கியமானதாக தோன்றியது. சி.கே.ஒ.சி., எனப்படும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் அடையாளம் காணுதல் நடைமுறை இந்த ஆண்டில் திருத்தி அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டது.
வங்கி, மியூச்சுவல் பண்டு, அஞ்சலகம் என்று எங்கே போனாலும் தனித்தனியாக மீண்டும் மீண்டும், கே.ஒய்.சி., விபரங்கள் கொடுக்க வேண்டியிருப்பது பெரிய இம்சை.
ஒருங்கிணைந்த ஒரே தரவுதளம் இருக்குமானால், அந்த எண்ணை மட்டும் தெரிவித்து, முதலீட்டுப் பயணத்தை ஆரம்பிக்கலாம். இந்த முயற்சி எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்று பார்க்கவேண்டும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph:98410 53881