வர்த்தக துளிகள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கு ரூ.10 கோடி அபராதம்



ஜி.எஸ்.டி., நடைமுறையின் கீழ் பொருட்களை தவறாக வகைப்படுத்தியதற்காக, 'பஜாஜ் ஆட்டோ' நிறுவனத்துக்கு வட்டியுடன் சேர்த்து 10.04 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புனே மத்திய ஜி.எஸ்.டி., இணை ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தியுள்ள பஜாஜ் நிறுவனம், கடந்த 2017 ஜூலை முதல் 2022 மார்ச் மாதம் வரை, ஜி.எஸ்.டி.,யின் கீழ் பொருட்களை தவறாக வகைப்படுத்தியதற்கு வட்டியுடன் சேர்த்து 10.04 கோடி ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பங்கு சந்தைகளில் தெரிவித்துள்ளது.

இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவு அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ள பஜாஜ் நிறுவனம், இது தொடர்பாக சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

'ரியல்மி' மீது 'போட்' குற்றச்சாட்டு



'ரியல்மி' நிறுவனத்தின், காதில் பொருத்திக் கொள்ளும் ஒலிக்கருவி மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, 'போட்' நிறுவனம் மத்திய அரசை அணுகியுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாத நிலவரப்படி, ஒயர்லெஸ் பொருத்திக் கொள்ளும் கருவிகள் பிரிவில் போட் நிறுவனம் 34 சதவீத சந்தை பங்குடன் முதலிடத்தில் உள்ளது; 6.40 சதவீத பங்குடன் ரியல்மி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், போட் பிராண்டின் உரிமையாளரான இமாஜின் மார்க்கெட்டிங் நிறுவனம், ரியல்மி ஒயர்லெஸ் பொருத்திக் கொள்ளும் கருவிகள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க வலியுறுத்தி, மத்திய அரசை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்திடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒயர்லெஸ் கருவிகளின் சந்தை கடுமையாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நிறுவனங்களுக்கிடையேயான போட்டியும் அதிகரித்து வருகிறது.

Advertisement