இதே நாளில் அன்று
பிப்ரவரி 3, 1930
வேலுாரில், சங்கீத சபாவின் செயலராக இருந்த லட்சுமி நரசிம்மாச்சாரி - மரகதவல்லி தம்பதியின் மகளாக 1930ல், இதே நாளில் பிறந்தவர் மணிபெருந்தேவி.
இவர், தன் தாயிடம் வயலின் வாசிக்க கற்றார். பின், கோபாலாச்சாரி யிடம் இசை கற்று, சிறு வயதிலேயே 500க்கும் மேற்பட்ட பாடல்களை கற்றார். சென்னை, கலாஷேத்ராவில் சங்கீத சிரோமணி படித்தார். மைசூரு வாசுதேவாச்சாரியார், முசிறி சுப்பிரமணிய அய்யர், டைகர் வரதாச்சாரி, பாபநாசம் சிவன் உள்ளிட்ட சங்கீத வித்வான்களிடம் தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார்.
குறிப்பாக, பாபநாசம் சிவன் பாணியை தன் கச்சேரிகளில் பின்பற்றினார். சோவியத் ஒன்றியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், மத்திய அரசின் சார்பில் பங்கேற்றுப் பாடினார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான குருவான இவர், கர்நாடக சங்கீத ரசிகர்களை கட்டிப் போட்டார். இவரது கணவர் கிருஷ்ணசாமி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்பவராக பணியாற்றினார்.
பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 72வது வயதில், 2002 ஜூலை 12ல் மறைந்தார்.
மணி கிருஷ்ணசாமி பிறந்த தினம் இன்று!