ஜம்புகேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த ஜம்பையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மணலூர்பேட்டை அருகே உள்ளது ஜம்பை கிராமம். ஐந்து சிவஸ்தலங்களுடன் பழம்பெரும் வரலாற்றை உள்ளடக்கிய, நுாற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளுடன் கூடிய பொக்கிஷ கிராமம் என்றால் அது மிகை ஆகாது.
கிராமத்தின் தெற்கே தென்பெண்ணை நதியோரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. கோவிலின் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கோவிலை புனரமைக்க வேண்டுமென, என கிராம மக்களும், சிவனடியார்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் முயற்சியால் கோவில் திருப்பணி சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. பெரும் நிதி உதவி தேவைப்படும் நிலையில், திருப்பணி நிறைவடையாமல் இருந்தது.
வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் முழுமையாக புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, லட்சுமி பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடாகி விமானம் மற்றும் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை மற்றும் ஜம்பை கிராம மக்கள் செய்திருந்தனர்.