ரோட்டில் கழிவுநீர் 'குளம்'; போராட மக்கள் களம்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு காவிலிபாளையம் ஆனந்தா அவென்யூ குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ளன.

வீடுகளில் இருந்து வெளி வரும் கழிவுநீர் செல்ல 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லை. இதனால் கழிவுநீர், - கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் குளம்போல் தேங்கி வருகிறது. தேங்கும் கழிவு நீரால் ரோடு சேறும் சகதியுமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மாநகராட்சி முதலாம் மண்டல அதிகாரிகள் கழிவுநீர் ரோட்டுக்கு வருவதை தடுக்கும் வகையில் ஆனந்தா அவன்யூ குடியிருப்பு மக்கள் வீட்டு முன் 'சோக்பிட்' அமைத்து கழிவுநீரை தேக்க வலியுறுத்தினர். இதை பலரும் அமைத்து உள்ளனர். சிலர் மறுத்து வருகின்றனர். இதனால், கழிவுநீர் ரோட்டில் தேங்குவது தொடர் கதையாகி வருகிறது.

வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறுகையில், ''இந்த பிரச்னை நான்கு ஆண்டாக உள்ளது. பல முறை அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் தேக்கத்தால் போக்குவரத்து பாதிப்பதோடு, தொடர் விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகளை கண்டித்து, வரும் 5ம் தேதி சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்,'' என்றார்.

Advertisement