'நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொணர்வதே இறை வழிபாடு'

மேட்டுப்பாளையம் : ''நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவது தான், இறை வழிபாடாகும்,'' என, சன்மார்க்க சங்க தலைவர் ராமதாஸ் பேசினார்.

காரமடை அருகே திம்மம்பாளையம் புதூர், சி.எம்.கே., நகரில் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆலயம் உள்ளது. இங்கு தர்மசாலை, சாதுக்கள் இல்லம் திறப்பு விழாவும், மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடந்தது. விழாவுக்கு கோவை மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் ராமதாஸ் தலைமை வகித்து, தர்ம சாலை மற்றும் சாதுக்கள் இல்லத்தை திறந்து வைத்து பேசியதாவது:

நாம் இறைவனை மறக்காமல் இருக்க வேண்டும். தொழில், வாழ்க்கை ஆகியவற்றை துவங்கும் போது, இறைவனை வணங்க வேண்டும். நமக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவது தான், இறை வழிபாடாகும். உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என, வள்ளலார் சொல்லியுள்ளார். அதனால் மாணவ, மாணவியர், சிறுவர்களுக்கு, பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதுப் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் மனது இறைவனால் கொடுத்தது. அந்த மனதின் வாயிலாக, கடவுளை பார்க்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் முடிந்தளவு, ஜீவகாருண்யம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை உறுப்பினர் ராமலிங்கம், கோவை மாவட்ட ஹிந்து அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன் பின் சன்மார்க்க சொற்பொழிவும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். காரமடை வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆலய நிர்வாகி சீனிவாசன் வரவேற்றார். இந்திரா நன்றி கூறினார்.

Advertisement