வனமரபியல் மரப்பெருக்கு மையத்தில் உலக சதுப்பு நில தின கொண்டாட்டம்

கோவை : கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு மையத்தில், (ஐ.எப்.ஜி.டி.பி.,), உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்பட்டது.

சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு நில தினம் கொண்டாடப்படுகிறது.

கோவை ஐ.எப்.ஜி.டி.பி., வளாகத்தில், 'நம் பொதுவான எதிர்காலத்துக்காக சதுப்பு நிலங்களை பாதுகாத்தல்' என்ற நடப்பாண்டுக்கான கருப்பொருளுடன், நிகழ்ச்சி நடந்தது.

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய ஒருங்கிணைப்பாளர், முதுநிலை விஞ்ஞானி ரேகா வாரியர் பேசுகையில், கார்பன் உறிஞ்சுதல் மற்றும் பருவநிலை மாறுபாடுகளின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதில், சதுப்புநிலங்களின் பங்களிப்பு குறித்து விவரித்தார்.

ஆராய்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் பேசுகையில், சதுப்பு நிலங்களின் பல்லுயிர்ச்சூழல், கடலரிப்பை தடுத்தல், கடல் கொந்தளிப்பு, சுனாமி போன்றவற்றின் தாக்கத்தைக் குறைத்தல், மனித வாழ்வியலில் அவற்றின் பெரும்பங்கு குறித்து விவரித்தார்.

ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குனர் குஞ்ஞி கண்ணன், சதுப்புநிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தைத் துவக்கி வைத்தார்.

வெவ்வேறு விதமான நன்செய் நிலங்கள், நன்னீர் கிடைக்கச் செய்வதில் அவற்றின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்தும் விவரித்தார்.

சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய முதுநிலை திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், சுற்றுச்சூழல் சார்ந்த வினாடி வினா போட்டியை நடத்தினார்.

நிகழ்ச்சியில், ஐ.எப்.ஜி.டி.பி., விஞ்ஞானிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement