குடும்ப தகராறில் போலீஸ்காரர் கொலை
எழுமலை; உசிலம்பட்டி அருகே குடும்பத்தகராறில் போலீஸ்காரரை கொலை செய்த மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவா, 32, போலீஸ்காரர். குடும்பத்தகராறு காரணமாக, 2017ல் இவரது மனைவி பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொன்மணி தற்கொலை செய்த நிலையில், அவரது மாமியார் வீட்டில் அவர்களது மகன் வளர்ந்து வந்தார்.
சமீபத்தில் போலீஸ்காரர் சிவா, இரண்டாவது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் வீட்டில் வளர்ந்து வந்த மகனை தன்னுடன் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார்.
இதில், மைத்துனருடன் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், நேற்று பாப்பிநாயக்கன்பட்டியில், சக போலீசார் ஒருவரின் இல்ல விழாவில் பங்கேற்க, சிவா தன் இரண்டாவது மனைவியுடன் பைக்கில் வந்துள்ளார்.
இவர்களை பார்த்த முதல் மனைவியின் சகோதரர் அர்ஜுனன், சிவாவின் பைக்கை தள்ளி விட்டு அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமார் மற்றும் டி.ராமநாதபுரம் போலீசார் கொலை செய்த அர்ஜுனனை தேடி வருகின்றனர்.