உண்ணாவிரத போராட்டம் கீரணத்தம் ஊர் கூட்டத்தில் முடிவு

கோவில்பாளையம் : மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து, கீரணத்தம் ஊராட்சியில் வரும் 9ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக கடந்த டிசம்பரில் தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். நேற்று காலை கீரணத்தத்தில் ஊர் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாநகராட்சி உடன் கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதால் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி, வீட்டுமனை அங்கீகார கட்டணம் ஆகியவை பல மடங்கு உயரும். மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் கடன் பெறுவதிலும் பிரச்சனை ஏற்படும். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். எனவே, கீரணத்தம் ஊராட்சியாகவே தொடர வேண்டும்.

இதை வலியுறுத்தி வருகின்ற 5ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கீரணத்தம் மாரியம்மன் கோவில் மைதானத்தில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து கோவில்பாளையம் காவல்துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement