திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கடலுார் : கடலுார், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு இடையே வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடலுார் திருவந்திபுரத்தில், 108 வைஷ்ண தளங்களில் முதன்மையான தேவநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2012ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டு நிறைவடைந்த நிலையில், கோவிலை புதுப்பிப்பதற்கான திருப்பணி கடந்த 2023ம் ஆண்டு தொடங்கியது.

திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 29ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை அதிவாசத்ரய ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. மாலை ஸ்ரீதேவி, பூதேவியடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

நேற்று காலை விஸ்வரூப தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசமடைந்து கோவிந்தா கோஷமிட்டனர்.

கும்பாபிஷேகத்தை அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மேயர் சுந்தரி ராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்மகோஷம் நடந்த பின்னர், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்தின் போது துணை மேயர் தாமரைச்செல்வன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்திற்கு நேற்று அதிகாலை முதல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்களின் வாகனங்கள் திருவந்திபுரம் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டது.

பக்தர்கள், கோவில் வளாகம், கோவில் அருகாமையில் மலைப்பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தனர்.

Advertisement