மின்விளக்கு இல்லாத நிறுத்தம் பேருந்து பயணியர் 'திக்... திக்'
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வெளிப்புறம், காமராஜர் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிழற்குடையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரம் பயணியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணியர் பாதுகாப்பற்ற சூழல் இருப்பாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலும் ஷேர் ஆட்டோவுக்காக பல பயணியர் இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். ஆனால், மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் இந்த இடத்திற்கு வருவதற்கே தயக்கம் காட்டுகின்றனர்.
நிழற்குடையின் கீழ் அதிகாலை நேரத்தில் நாளிதழ்களை பிரித்து வீடு வீடாக கொண்டு செல்லும் ஊழியர்களும், மின்விளக்கு இன்றி கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம், மின்விளக்கு வசதி ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.