விமான நிலைய 2வது சர்வதேச முனைய பணிகள் இழுவை
சென்னை:நாட்டின் பிரதான விமான நிலையங்களில் ஒன்றாக, சென்னை விமான நிலையம் உள்ளது. இங்கு உள்நாட்டிற்கு டி - 1, டி - 4 என்ற முனையமும், சர்வதேச பயணியருக்காக டி - 2 என்ற முனையமும் செயல்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில், தற்போது 'பீக் ஹவர்' நேரங்களில், தினமும் 12,000 பயணியர் 25 விமான நகர்வுகள் உள்ளன. தற்போது, டெர்மினல் - 3ல் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதிய சர்வதேச முனையத்தை மேம்படுத்தும்பட்சத்தில், ஆண்டுக்கு 3.50 கோடி பயணியரை கையாளும் திறன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள், நடப்பாண்டு ஜூலையில் முடிந்து, 2026 மார்ச்சில் செயல்பாட்டிற்கு வரும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், முனையம் கட்டும் பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மற்ற விமான நிலையங்களை விட உள்கட்டமைப்பு விஷயங்களில், சென்னை விமான நிலையம் பின் தங்கிய நிலைய உள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் தொய்வு அடைந்து வருவது விமான பயணியர் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தெளிவான திட்டமிடல் இல்லாதததே, இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அரசே காரணம்
இது குறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள், திட்டமிட்டப்படி அதற்கான திட்ட அறிக்கை உள்ளிட்ட அனைத்து விபரங்களும், ஒப்பந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. அப்போதைய நிலவரப்படி 'கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புக்கான அனுமதி' கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டது. இதில், மாநில அரசும் போதுமான ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்கவில்லை. இதன் காரணமாக, பணிகளை திட்டமிட்டப்படி செய்ய முடியாமல் தள்ளி போனது. அதுமட்டுமல்லாமல், கொரோனா காலகட்டத்தால் பணிகள் முடங்கின.
அதற்குள் கட்டுமான மூலப்பொருட்கள் விலை, வேலை ஆட்கள் கூலி என அனைத்தும் கிடுகிடுவேன உயர்ந்து விட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, ஜூன் மாதத்தில் செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இருப்பினும் அனைத்து பணிகளும் முடிந்து செயல்பாட்டிற்கு வருவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களை காட்டிலும் பயணியரை கையாள்வதில் சென்னை விமான நிலையம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. கொரோனா காலகட்டத்தால் பணிகள் தாமதமானது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவ்வளவு நாட்கள் கடந்தும், மாறி மாறி வெறும் காரணங்களை சொல்லியே இழுத்தடிப்பது, விமான நிலையம் மட்டுமின்றி நகரின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
- விமான பயணியர்.
சென்னை விமான நிலையத்தில் ஏரோ பிரிஜ்கள் போதுமான அளவு இல்லை. இவற்றை அதிகரிப்பது அவசியம். முன்னேற்ற பணிகளுக்கு தேவையான நிதியை விமான நிலைய ஆணையம் வழங்க வேண்டும். தற்போது சாட்டிலைட் முனையம் அமைக்க ஆணையம் ஆர்வம் காட்டி வருகிறது. இதை, இரண்டாம் கட்ட பணிகளை போல் காலம் தாழ்த்தாமல், விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் சிறப்பானதாக அமையும்.
- தயானந்த கிருஷ்ணன்,சமூக ஆர்வலர் சென்னை