வரி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கனடா பதிலடி! இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

ஒட்டாவா: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அதற்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் 47வது அதிபராக, ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப், 78, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு:

மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும். எனினும், எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உட்பட கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிசக்திக்கு, 10 சதவீத வரி விதிக்கப்படும்.

இதேபோல், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

எல்லையில் நடக்கும் சட்ட விரோத குடியேற்றம், போதைப்பொருள் பயன்பாடு அமெரிக்க மக்களை பெரிதும் பாதிப்பதால், கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு, பிப்., 4 முதல் அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் வரி விதிப்பால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பில், 'அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும்.

'நாங்கள் இந்த வரிவிதிப்பை விரும்பவில்லை. எங்களுக்கு அதிக வரி விதித்தால் நாங்களும் அதை செய்வோம்' என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 'அமெரிக்க பொருட்களுக்கு மெக்சிகோவும் வரிகளை விதிக்கும்' என, அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், கனடாவும் விதித்துள்ள இந்த வரிகள் பொருளாதார சீர்குலைவுக்கு இட்டுச் செல்லும் என்றும், பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் அடுத்த குறி?

சர்வதேச நாடுகளை, தன் வழிக்கு கொண்டு வரும் முயற்சியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து, 'பிரிக்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பின் சார்பில், சர்வதேச வர்த்தகத்துக்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக, பிரத்யேக கரன்சியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 'டாலருக்கு மாற்றாக கரன்சியை உருவாக்கும் முயற்சியில், 'பிரிக்ஸ்' நாடுகள் இறங்கினால், அதை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது. 'இந்த முடிவை கைவிடாவிட்டால், அந்த அமைப்பில் உள்ள நாடுகள், 100 சதவீத வரியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்' என, எச்சரித்திருந்தார்.

Advertisement