ஜனாதிபதி பற்றி அவதுாறு; சோனியா மீது வழக்கு
முசாபர்பூர்; ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்ததாகக் கூறி, காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கை பதிவு செய்யக் கோரி, பீஹார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பார்லிமென்டில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31ல் துவங்கியது. இந்த உரை குறித்து, பார்லி., வெளியே நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, 'ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் படித்ததால், ஜனாதிபதி சோர்வடைந்து விட்டார்; பாவம்' என்றார்.
சோனியாவின் இந்த கருத்துக்கு, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாகக் கூறி, சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கோரி, பீஹாரின் முசாபர்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், சோனியாவின் மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான பிரியங்கா ஆகியோரின் பெயர்களையும், வழக்கறிஞர் சுதிர் ஓஜா குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, வரும் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.