பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து குஜராத்தில் 5 பக்தர்கள் பலி

டாங்க்; குஜராத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியாகினர்.

ம.பி.,யைச் சேர்ந்த 48 பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா செல்வதற்காக நான்கு தனியார் பஸ்களில் புறப்பட்டனர். அவர்கள் மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரிம்பகேஸ்வர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குஜராத்தின் துவாரகா புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை குஜராத்தின் டாங்க் மாவட்டத்தில் உள்ள சபுத்தரா பகுதிக்கு வந்த ஒரு பஸ் சபுத்தரா மலை பகுதியில் அதிகாலை சென்றது.

அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 35 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விபத்தில் சிக்கியது.

இதில், ஐந்து பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் 17 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அதில் உயிரிழந்த பஸ் டிரைவர் உட்பட மூன்று ஆண்களின், இரு பெண்களது சடலங்கள் மீட்கப்பட்டன.

காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement