மஹா கும்பமேளாவில் புனித நீராடிய 118 வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள்
மஹா கும்ப நகர்:உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளாவில், 77 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள் உட்பட, 118 பேர் அடங்கிய வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள் புனித நீராடினர்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்வு ஜன., 13ல் துவங்கியது.
வரும் 26 வரை இந்த நிகழ்வு நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 30 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.
உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் மஹா கும்ப மேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், 77 நாடுகளைச் சேர்ந்த துாதர்கள், துாதரக அதிகாரிகள் உட்பட, 118 பேர் அடங்கிய வெளிநாட்டு சிறப்பு பிரதிநிதிகள், தங்களது குடும்பத்துடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினர்.
இது குறித்து, கொலம்பியா துாதர் விக்டர் சாவேரி கூறுகையில், “இது என் வாழ்க்கையின் ஒரு அற்புதமான அனுபவம். மஹா கும்பமேளாவில், மக்களின் ஆன்மிகத்தையும், சக்தியையும் உணர்வது மிகவும் சிறப்பான அனுபவம். இந்திய கலாசாரம் மிகவும் வளமானது; அமைதி மற்றும் மனிதநேயத்திற்கானது,” என்றார்.
ரஷ்ய துாதரின் மனைவி டயானா கூறுகையில், “இந்த புனித நிகழ்வில் பங்கேற்க வாய்ப்பளித்த இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி. இங்கு புனித நீராடிய பின், எனக்கு நிறைய ஆன்மிக அமைதி கிடைத்தது. இந்திய கலாசாரம் மிகவும் பன்முகத்தன்மை கொண்டது. இங்குள்ள மக்கள் அதைப் பாதுகாத்து பின்பற்றுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
ஸ்லோவாக்கியா துாதர் ராபர்ட் கூறுகையில், “இந்த அனுபவம் மறக்க முடியாதது. இந்த நிகழ்வின் முக்கிய செய்தி அமைதி மற்றும் ஒற்றுமை. இது உலகம் முழுதும் பரவ வேண்டும். இந்த மகத்தான நிகழ்வை ஏற்பாடு செய்த இந்திய அரசு, உ.பி., அரசுக்கு பாராட்டுகள்,” என்றார்.