இலக்கை தாண்டிய 'வெற்றி'  பயணம்

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மாவட்டம் முழுவதும், மூன்று பசுமை படைகள் களமிறங்கி, மரக்கன்று நட்டு வளர்க்கும் பணியை செயல்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் அணுகினால், நிலத்தில் வளர்க்க ஏதுவாக மரக்கன்றுகள் இலவசமாக நட்டு தரப்படுகிறது. அவற்றை சொட்டுநீர் பாசனம் அமைத்து பராமரித்து வந்தால், விவசாயிகளுக்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது.

இதன் 10வது திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை விஞ்சி, 3.75 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

குண்டடம் அருகே உள்ள தேவராஜப்பட்டினத்தில் நேற்று மரக்கன்று நடும் விழா நடந்தது. லட்சுமணசாமி என்பவரின் தோட்டத்தில், தேக்கு -2,500, மகோகனி -500, கயா -500, அவகோடா -450, சாத்துக்குடி -250, மாதுளை -250, பலா -200 என, 4,650 மரக்கன்றுகள் நடப்பட்டன.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த, 10 ஆண்டு களில், 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, 18 லட்சம் கன்றுகள், மரமாக வளர்க்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்,' என்றனர்.

Advertisement